வடக்கும் வாழணும், தெற்கும் வாழணும் - கொள்ளை சம்பவங்களால் விரிசலடையும் தமிழர் - வட இந்தியர் உறவு?

வடக்கும் வாழணும், தெற்கும் வாழணும் - கொள்ளை சம்பவங்களால் விரிசலடையும் தமிழர் - வட இந்தியர் உறவு?

தமிழ்நாட்டில் கொள்ளை ஏதாவது நடந்தால் வட இந்தியர்களை சந்தேகப்படும் போக்கு, பத்தாண்டுகளாகவே இருந்து வருகிறது. கூடவே, தமிழ் தேசிய உணர்வாளர்களும் வட இந்தியர்களுக்கு எதிரான மனோபாவத்தில் இருப்பதால் இளைஞர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலையில்லாத நிலைக்கு வட இந்தியர்கள்தான் காரணம் என்று தமிழ் இளைஞர்கள் அழுத்தமாக நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு வட இந்திய தொழிலாளர்களே காரணம் என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். சமீபத்தில் நடந்த கொள்ளைச் சம்பவங்கள் குறித்த விவாதங்களில் கூட வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வு வெளிப்பட்டது.

பெரம்பூரில் உள்ள நகைக்கடையில் கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் கதவில் துளை போட்டு 9 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அடுத்த சில நாட்களில் திருவண்ணாமலை ஒரே இரவில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்.களில் ரூ.72 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையடித்துவிட்டு ஏடிஎம் மெஷினுக்கும் தீ வைத்துவிட்டு தப்பிய கொள்ளை கும்பலை காவல்துறை தேடிவருகிறது.

இத்தகைய சம்பவங்களில் வட மாநில கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், கொள்ளையடித்துவிட்டு கர்நாடாகா, ஆந்திரா மாநிலங்களுக்கு தப்பியோடிவிடுவதாகவும் காவல்துறை விசாரணை மூலம் தெரிய வந்திருக்கிறது. பெரும்பாலான சம்பவங்களில் உள்ளூர் திருடர்கள் சம்பந்தப்படவில்லையென்றால் வட மாநில கொள்ளையர்களின் வேலை என்று செய்திகள் பரப்பப்படுவது தமிழ்நாட்டில் உள்ள வட இந்தியர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

பொதுவெளியில் வட இந்திய தொழிலாளர்கள் தாங்கள் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதை விரும்பவில்லை. இதன் காரணமாகவும் கருத்து மோதல்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. கோவை சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கும், வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டிருக்கிறது.

விடுதி கேண்டினில் உணவு பரிமாறுவதில் நேற்று மாணவர்களுக்கும் - வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இங்கே ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கூடுதல் உணவு வழங்கக்கோரி மாணவர்கள் கேட்ட நிலையில் அதற்கு வடமாநில தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது, வடமாநில தொழிலாளர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பதிலடியாக மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மோதலின் போது வடமாநில தொழிலாளர்கள் உருட்டுக்கட்டைகளுடன் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் கல்லூரி வளாகத்திற்குள் உருட்டு கட்டைகளுடன் சுற்றித்திரியும் வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது.

வடக்கன், கிழக்கன், தெற்கன், மேற்கன் எங்கிருந்து வந்தாலும் நம்மைப்போல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சமீபத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி டிவிட்டரில் பதிந்த விஷயமும் பல ஆயிரக்கணக்கானவர்களால் ரீடிவிட் செய்யப்பட்டு வைரல் ஆகியிருக்கிறது. அமைதி விரும்பிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்பதே பெரிய ஆறுதல்!!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com