விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 பெண்கள் உட்பட 11 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் என மொத்தம் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில் நேற்றுமுன்தினம் அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த சங்கர், சுரேஷ், தரணிவேல், மண்ணாங்கட்டி, ராஜமூர்த்தி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் அதை வாங்கி குடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால், புதுச்சேரி காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சுரேஷ், சங்கர், தரணிவேல், ராஜமூர்த்தி, மலர்விழி, மண்ணாங்கட்டி ஆகிய 6 பேரும் நேற்று உயிரிழந்தனர். மற்ற 20 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் அஞ்சலி செலுத்தினர். சாராய வியாபாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளச் சாராயம் அருந்தி 4 பேர் உயிரிழந்துள்ளதாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார். இந்த விவாகாரத்தால் 7 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.