இந்தியாவில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை உயர்வு!
உலகில் அதிக இளைஞர்களை கொண்ட நாடு என்று அழைக்கப்படும் இந்தியா, இன்னும் சில வருடங்களில் உலகில் அதிக முதியோர்களைக் கொண்ட நாடாக மாறும் என்று ஐநா சபை குறிப்பிட்டு இருக்கிறது. இது தொடர்பாக ஐநா சபை வேகமாக முதுமை அடையும் இந்தியா என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அதில் தெரிவித்திருப்பது, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா இன்னும் சில ஆண்டுகளில் அதிக முதியோர்களை உள்ளடக்கிய நாடாக உருவாக உள்ளது. குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் வசிக்கும் நாடு இந்தியா என்ற நிலையை அடைய வாய்ப்பு உருவாகியுள்ளது. 2010 ஆம் ஆண்டு 15 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிகப் பெரும் அளவில் உயர்ந்து காணப்பட்டது.
ஆனால் 2021 ஆம் ஆண்டு 100 குழந்தைகள் இருக்கும் இந்திய மக்கள் தொகையில் 39 பேர் மூத்த குடிமக்களாக இருக்கின்றனர். அதிலும் தென் மாநிலங்கள், மேற்கு மாநிலங்களில் அதிக அளவிலான மூத்த குடிமக்கள் வாழ்கின்றனர். 2036 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் மூத்த குடிமக்களாக இருப்பார்கள்.
2022 ஜூலை 1 ஆம் தேதி கணக்கின்படி 60 வயது மூத்த குடிமக்களினுடைய எண்ணிக்கை 14 கோடி 90 லட்சமாக இருந்தது. இது இந்திய மக்கள் தொகையில் 10.5 சதவீதம் ஆகும். 2036-ல் 22 கோடியே 70 லட்சமாக உயர்ந்து. இது 15 சதவீதமாக மாறும். 2046 ஆம் ஆண்டு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சேர்த்தால் கூட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுடைய எண்ணிக்கைக்கு ஈடாகாது.
குறிப்பாக இன்னும் 20 ஆண்டுகளில் 15 வயது முதல் 59 வயது வரை உடைய இந்தியர்களுடைய எண்ணிக்கை குறைய வாய்ப்பு உருவாகி இருக்கிறது. 2050 ஆம் ஆண்டு 5 பேரில் 60 வயதுக்கு மேற்பட்டவர் ஒருவர் என்று வீதத்தில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை இருக்கும்.
இதன் மூலம் பொருளாதாரத்தில் பிறரை சார்ந்து வாழும் நிலை உருவாகும். உற்பத்தி அளவு குறையும், உழைக்கும் சதவீதம் குறையும், தேவை அதிகரிக்கும், குழந்தை பிறப்பு வீதம் குறையும், முதியோர் இல்லங்கள் அதிகரிக்கும், அரசுக்கான மூத்த குடிமக்களுக்கான சலுகைகளுக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டிய நிலை உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.