
சென்னையில் நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறாக பல்வேறு இடங்களில் தெருநாய்கள் சுற்றி திரிகின்றன.
நாய்களை முறையாக வீட்டில் வளர்க்காமல் பலரும் வெளியில் சுற்றித்திரிய விடுகின்றனர். தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து செல்வதுடன், அவற்றை வளர்த்து விட்டு தெருவிலேயே விடுகிறவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவை தெருக்களில் கழிவுகளை உண்டு, அந்த வழியாக செல்கிறவர்களை விரட்டி இடையூறு ஏற்படுத்துகின்றன. நோய்த்தொற்றுக்கு ஆளான தெருநாய்கள் ஒருவரை கடித்தால் அவருக்கும் நோய்த்தொற்று பரவுகிறது.
இவை ஓட்டல்கள், இறைச்சி கடைகளில் உள்ள கழிவுகளை தின்று விட்டு அங்குள்ள சாலைகள், தெருக்களிலே அலைகின்றன. அந்த வழியாக நடந்து செல்கிறவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களையும் அவை விரட்டி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன.
இவற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும் கூட நடை பாதைகள், பூங்காக்கள், கடற்கரை பகுதிகள், தெருக்கள் என பல்வேறு இடங்களில் தெரு நாய் தொல்லை தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 1.8 லட்சம் தெருநாய்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
தெருநாய்கள் கடித்து பலரும் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை தெருநாய்கள் விரட்டியதில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை அருகே வாலிபர் ஒருவரை தெருநாய் கடித்து குதறியதில் சிகிச்சை பலனின்றி இறந்தார். சமீபத்தில் நெல்லை அருகே தம்பதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, நாய் திடீரென்று குறுக்கே பாய்ந்தில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் வருத்தத்தை அளித்தாலும் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.
நாய்கடிக்கு ஆளான ஏராளமானவர்கள் பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் தடுப்பூசி போட்டு செல்கின்றனர். நாய்க்கடிக்கு சிகிச்சைக்கு செல்கிறவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் தொடர் சிகிச்சை பெற வேண்டி இருப்பதால் பல்வேறு இன்னலுக்கு ஆளாகின்றனர். மாணவர்களை தெருநாய்கள் கடிக்கும்போது, அவர்கள் ஆஸ்பத்திரிகளுக்கு அலைந்து சிகிச்சை பெறுவதால் படிப்பு பாதிக்கப்படுகிறது.
தெருநாய்கள் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை விரட்டி விரட்டி கடிக்கின்றன. இதனால் பல்வேறு விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதனால் அதிகாலையில் நடைப்பயிற்சி செல்வர்கள் அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது. அதேபோன்று தெருநாய்களுக்கு சிலர் பிஸ்கெட் போன்ற உணவுகளை கொடுக்கின்றனர். இதனால் அந்த பகுதியிலேயே நாய்கள் சுற்றித்திரிவதுடன் அங்கு புதிதாக செல்கிறவர்களை விரட்டுகின்றன.
தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்தும் வகையில், அவற்றை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும். பின்னர் அவற்றை வேறு எங்காவது ஒதுக்குப்புறமான இடத்தில் பராமரிக்கலாம். ஆனால் தற்போது மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து செல்லும் தெருநாய்களை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து விட்டு செல்கிறார்கள். சில நேரங்களில் அவற்றுடன் கூடுதலாக நாய்களையும் ஓரிடத்திலேயே விட்டு செல்கிறார்கள். தெருநாய்கள் தொல்லையை தடுக்க மாநகராட்சி நிர்வாகமும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.