சிங்கப்பூரில் கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சிங்கப்பூரில் கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சிங்கப்பூரில் தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை கடந்த 22 ஆண்டுகளாக இல்லாத அளவு அதிகரித்து வந்துள்ளது. அந்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தற்கொலை விகிதம் 26 சதவீதமாக அதிகரித்து இருப்பது பெரும் கவலையை ஏற்படுத்திதுள்ளது. சொல்லமுடியாத மனஅழுத்தம்தான் தற்கொலைக்கு காரணம் என்று உள்ளூரைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தற்கொலை தொடர்பான தரவுகளை வெளியிட்டுள்ள அந்நாட்டின் தற்கொலை தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் 10 வயது சிறுவர்கள் முதல் 29 வயது உடைய இளைஞர்களும், முதியோர்களில் 70- வயது முதல் 79 வயதினர்களும் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துள்ளது.

அதேபோல் கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் 476 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் இந்த எண்ணிக்கை கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன் 2000 ஆம் ஆண்டில் 378 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று அந்த மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மனதுக்கு வேதனை அளிக்கிறது என்று பிரபல மனநல மருத்துவர் ஜாரெட் நக் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் மற்றும் முதியோர் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாவதே தற்கொலை செய்துகொள்ள முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலும் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுபவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்கள்தான் தற்கொலை முடிவுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்காவது ஆண்டாக தொடர்ந்து 10 முதல் 29 வயதுவரையிலான இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது கவலை தருகிறது. இது தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கையில் 33.6 சதவீதமாகும். 2022 ஆம் ஆண்டில் இளம் வயதைச் சேர்ந்தவர்கள் 125 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது அதற்கு முந்தை ஆண்டைவிட 11.6 சதவீதம் அதிகமாகும். 2021 இல் 112 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

சர்வதேச அளவில் 15 முதல் 29 வயது வரையிலானவர்கள் உயிரிழப்பில் நான்காவது முக்கிய காரணம் தற்கொலையாகும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் 70 முதல் 79 வயது வரையிலானவர்கள் தற்கொலை செய்து கொள்வது 2022 இல் அதிகரித்துள்ளது. அதாவது 48 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இது 2021 இல் 30 ஆக இருந்தது.சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துவருகிறது. அதேநேரத்தில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது சிங்கப்பூரில் நான்கில் ஒருவர் 2030-க்குள் 65 வயதை எட்டி விடுவார்கள் எனத் தெரியவந்துள்ளது. இது மூன்றாண்டுகளுக்கு முன்னர் 6 ல் ஒருவர் என்ற கணக்கில் இருந்தது. மனநோய், மன அழுத்தம், சமூகப் பிரச்னைகளும் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் என தற்கொலை செய்து கொள்வதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்த பிரச்னைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 7,00,000 பேர் தற்கொலை செய்துகொள்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com