கர்நாடகா பட்ஜெட்டை விமர்சித்து காதில் பூவோடு வந்த எதிர்க்கட்சியினர்!

கர்நாடகா பட்ஜெட்டை விமர்சித்து காதில் பூவோடு வந்த எதிர்க்கட்சியினர்!

ர்நாடகா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை செயல்பட்டு வருகிறார். தேர்தல் நடைபெற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடையப்போகும் இத்தருணத்தில், வரும் மே மாதம் இம்மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான திட்டமிடலை தேர்தல் ஆணையம் ஒருபுறம் மேற்கொண்டிருக்க, மாநில நிதித்துறையையும் தம்வசம் வைத்திருக்கும் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை இந்த ஆண்டுக்கான கடைசி பட்ஜெட்டை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு 2.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அறிவிப்புகள் வெளியான நிலையில், நடப்பாண்டு 3.09 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, புதிய பேருந்து திட்டம், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் சிறுபான்மை சமூக இளைஞர்கள் பத்தாயிரம் பேருக்கு ராணுவ இலவசப் பயிற்சி, மழைக்கால வெள்ள பாதிப்பு தடுப்பு நடவடிக்கை, நெரிசல் மிகுந்த பகுதிகளில் பெண்களுக்கு 250 கழிவறைகள் கட்டித் தருவது, கோயில் மற்றும் மடங்களைப் புதுப்பிக்க நிதி ஒதுக்குதல், விவசாயிகளுக்குக் கடன் உதவி, புதிய பல்கலைக்கழகம், இலவச பஸ் பாஸ் போன்ற பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

இந்த பட்ஜெட் மூலம் மக்கள் அனைவரின் காதுகளிலும் இம்மாநில பாஜக அரசு பூ வைக்கிறது என்பதை குறிப்பால் உணர்த்தும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா உட்பட, அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தங்களது காதுகளில் பூ வைத்துக் கொண்டு இன்று சட்டசபைக்கு வந்து பாஜகவின் பட்ஜெட்டை விமர்சித்தனர். அதோடு, பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசை தொடர்ச்சியாக விமர்சித்துவரும் சித்தராமையா, `ஆளுங்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்த 600 வாக்குறுதிகளில் வெறும் 10 சதவிகிதத்தை மட்டுமே நிறைவேற்றியிருக்கிறது' என பலமுறை சாடியிருந்தார். ஆனாலும், இன்றைய பட்ஜெட் உரையின்போது முதல்வர் பசவராஜ் பொம்மை, தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளின் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை ஒன்றை விரைவில் வெளியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்.

முதல்வர் பசவராஜ் தலைமையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட், வரும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசுக்கு சாதகமாக இருக்குமா? அல்லது பாதகத்தை விளைவிக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com