பி.ஜே.பி.க்கு 30 வருஷமா டஃப் கொடுக்கும் கோவை காந்தி காலனி மக்கள்!

பி.ஜே.பி.க்கு 30 வருஷமா டஃப் கொடுக்கும் கோவை காந்தி காலனி மக்கள்!

கோவை மாவட்டம் துடியலூரில் அமைந்துள்ளது அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி காலனி. இப்பகுதியில் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக உட்பட மற்ற ஐந்து கட்சிகளின் கொடி கம்பங்கள் உள்ளன. ஆனால் பா.ஜ.க.வின் கொடி கம்பம் மட்டும் அங்கு இல்லை. இது பா.ஜ.க.வினருக்கு ஒரு குறையாகவே இருந்து வந்துள்ளது. அதனால் இரவோடு இரவாக பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் அக்கட்சியின் கொடிக் கம்பத்தை நட்டு வைத்து விட்டார்.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கள் ஊரில் பா.ஜ.க.வை அனுமதிக்க மாட்டோம் என்று அப்பகுதி மக்கள் போலிஸ் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து காந்தி காலனியை சேர்ந்த சிலர் கூறுகையில்,

30 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை சேர்ந்த சிலர் பாஜகவில் சேர்ந்தனர். அதன் பிறகு இப்பகுதியில் அவர்களுடைய நடவடிக்கை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. எங்களுக்குள் ஒற்றுமை போய்விட்டது. அவர்களுடைய நடவடிக்கை எங்களுக்குப் பிடிக்கவில்லை. எங்களுக்குள் அடிக்கடி சண்டைகள் எழுந்தன. அதனால் அவர்களை இந்த ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டோம். அதன்பின்தான் இங்கு இயல்பு நிலை திரும்பியது.

அப்போதுதான் “இனி பாஜகவில் யாரும் சேர மாட்டோம்“ என்று காந்தி காலனி மக்கள் ஒன்று கூடி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினோம். 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை எங்கள் ஊரை சேர்ந்த ஒருவர் கூட பாஜகவில் சேரவில்லை.

ஆனால் இப்போது சின்ராஜ் என்பவர் மட்டும் பாஜகவில் சேர்ந்துள்ளார். அவரை வைத்துக் கொண்டு பாஜகவினர் இங்கு பாஜக கொடி கம்பத்தை இரவோடு இரவாக நட்டு விட்டனர்.

தமிழ்நாட்டில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு சென்றிருக்கலாம். ஆனால் இன்னும் 30 ஆண்டுகள் ஆனாலும் எங்கள் காந்தி காலனி பகுதியில் பாஜகாவால் அடியெடுத்து வைக்க முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை.

கொடி கம்பம் பிரச்னை குறித்து சுமார் 50 கிராம மக்கள் கையெழுத்திட்டு மனு அளித்திருக்கின்றனர். பின்னர் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், போலீசார் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கொடி கம்பம் அகற்றப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com