கேரளாவில் வாடகைக்கு மைக் செட் எடுத்து திட்டித் தீர்த்த நபர்.

கேரளாவில் வாடகைக்கு மைக் செட் எடுத்து திட்டித் தீர்த்த நபர்.

ருவரை யாராவது தவறாகப் பேசினால், அவர்களிடமே நேரில் சென்று சண்டையில் ஈடுபடுவதைப் பார்த்திருப்போம். ஆனால் கேரளாவில் தன்னைப் பற்றி தவறாகப் பேசியதற்கு பதிலடி கொடுக்க, மைக்செட் வாடகைக்கு எடுத்து திட்டித் தீர்த்த ஒருவரின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

தனது பைக்கில் மைக் செட்டுடன் வந்த அந்த நபர், மைக்கை கையில் பிடித்து, "உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னிடம் வந்து நேரடியாக பேசுங்கள். அதை விட்டு, எங்கோ இருந்துகொண்டு மற்றவர்களிடம் புறம் பேசாதீர்கள்" என காதில் தேனூரும் சில வார்த்தை களையும் சேர்த்து திட்டித் தீர்த்துள்ளார். இதுகுறித்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டதால், அந்த நபரின் மைக் செட்டை போலீசார் பறிமுதல் செய்து அவரை விசாரித்தனர். 

விசாரணையில் அவர் கூறியதாவது," நான் இறைச்சி மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன். அதிகாலையில் 3 மணிக்கு எழுந்தால் இரவு தூங்குவதற்கு 11 மணி ஆகிவிடும். அதுவரை மிகவும் கடினமாக உழைப்பேன். கஷ்டப்பட்டு தான் இந்த வீட்டை கட்டினேன். வீடு கட்ட தொடங்கிய நாள் முதலே, இங்குள்ளவர்கள் என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகப் பேசி வருகிறார்கள். நானும் பொறுமையாக எதையும் கண்டு கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் தவிர்க்க முடியாமல், மைக்கில் திட்டும் நிலைக்கு சென்றுவிட்டேன். இது சரியா தவறா என்பதெல்லாம் எனக்கு தெரியவில்லை" என்று கூறிய அந்த நபர், தன்னைப்பற்றி என்னவெல்லாம் அவதூறு பேசினார்கள் என்பதை பட்டியலிட்டார். 

  1. என் மனைவி என்னுடன் சண்டை போட்டுக்கொண்டு அவரின் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டதாக சொன்னார்கள்.

  2. என் வீட்டு கிரகப்பிரவேச விழாவில் 25 லட்சம் வசூலானதாக சொன்னார்கள். 

  3. ஒரு சமயம் என் வீட்டிலுள்ள பசுக்களை விற்க இரண்டு புரோக்கர்களை அழைத்து வந்திருந்தேன். இதை பார்த்துவிட்டு இவனுக்கு நிறைய கடன் இருக்கிறது போல, அதனால்தான் வீட்டை விற்கப்போகிறான் என்று கூறினார்கள். 

  4. என் வீடு கட்ட எனது சித்தப்பா தான் உதவி செய்ததாகவும், அதை திருப்பிக் கொடுக்காததால் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு நான் அவரைத் தாக்கியதாகவும் சொன்னார்கள்.

என் தந்தை இறந்த பிறகு எனது சித்தப்பாவிடம் தான் எனக்கு தேவையான ஆலோசனைகளைப் பெற்று வருகிறேன். என் தந்தை ஸ்தானத்தில் இருக்கும் சித்தப்பாவுக்கும் எனக்கும் பிரச்சனை என்று சிலர் தவறாகப் பேசுவதாக ஒரு ஆட்டோ டிரைவர் கூறினார். இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஒருவர் இருவர் தவறாகப் பேசினால் அதை பொறுத்துக் கொள்ளலாம். நிறைய பேர் என்னை பற்றி அவதூறாக பேசியதால், அனைவரும் ஒட்டுமொத்தமாக பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக, வாடகைக்கு மைக் செட் எடுத்து வந்து பேசினேன். 

மாலை நேரத்தில் 5:30 மணியளவில் ஒரு டீக்கடையில் அனைவரும் கூட்டமாக இருப்பார்கள். அந்த சமயத்தில் தான் டீக்கடை முன்பு மைக் செட் வைத்து பேசினேன். இதை யாரோ செல்போனில் படம் பிடித்து பரப்பியிருக்கி றார்கள். நான் வேண்டுமென்றே யாரையும் பேசவில்லை. அதேபோல மற்றவர்களும் என்னைப் பற்றி அவதூறு பேசக்கூடாது என விரும்புகிறேன் என தன் தரப்பு நியாயத்தை போலீசில் கூறினார் அந்த நபர். 

எப்படி தான் இப்படியெல்லாம் புதுசு புதுசா யோசிக்கிறாங்களோ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com