
ஸ்பானிஷ் விபத்து விசாரணை ஆணையமான CIAIAC இரு நாட்களுக்கு முன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியானதும் உலக அளவில் அதிர்ச்சி ஏற்பட்டது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த லுஃப்தான்சா நிறுவனத்தின் விமானம் ஒன்று, 199 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களை ஏற்றிக் கொண்டு வானில் பறந்துள்ளது. அந்த விமானம் நடுவானில் பறந்த போது விமானியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுமார் 10 நிமிடங்கள் பறந்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 17 அன்று பிராங்பேர்ட்டிலிருந்து ஸ்பெயினுக்கு விமானம் சென்று கொண்டிருந்த போது, விமானத்தின் விமானி அவசரத்திற்கு கழிவறையை பயன்படுத்த, விமான கட்டுப்பாட்டு அறையை விட்டு வெளியேறினார். விமானி அவசர தேவைக்கு அறையை விட்டு வெளியேறும் போது விமானத்தின் கட்டுப்பாடு துணை விமானியிடம் இருக்கும். அப்போது விமானத்தை அவர் இயக்குவார்.
பத்து நிமிடம் கழித்து விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு செல்ல முயன்ற போது, கதவு திறக்கப்பட வில்லை. விமானி தொடர்ந்து கதவை தட்டியும் உள்ளிருந்த துணை விமானி கதவை திறக்கவில்லை. விமானி வழக்கமான கதவு திறப்பு குறியீட்டை உள்ளிட முயற்சி செய்தார். இது கட்டுப்பாட்டு அறையில் ஒரு பஸரை இயக்குகிறது, இதனால் துணை விமானி கதவைத் திறக்க முடியும். விமானி ஐந்து முறை அவ்வாறு செய்தும் கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைய முடியவில்லை. விமானத்தில் உள்ள தொலைபேசியைப் பயன்படுத்தி துணை விமானியைத் தொடர்பு கொள்ள முயன்றும் பலனளிக்கவில்லை.
இறுதியாக, விமானி ஒரு அவசர குறியீட்டை உள்ளீடு செய்தார். அதன் மூலம் விமானி அவசர காலத்தில் தன்னிச்சையாக கதவைத் திறக்க முடியும். கதவு தானாகவே திறக்கப்படுவதற்கு சற்று முன்பு, துணை விமானி தடுமாறிக் கொண்டே கதவை திறந்துள்ளார். துணை விமானியின் நிலையைக் கண்ட விமானக் குழுவினரும், விமானத்தில் பயணித்த மருத்துவரும் முதலுதவி செய்தனர்.
இதனால் முதன்மை விமானி விமானத்தை மாட்ரிட்டின் அடோல்போ சுவாரெஸ் மாட்ரிட்- பராஜாஸ் விமான நிலையத்திற்கு திருப்பினார். மாட்ரிட்டில் துணை விமானிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
இது பற்றி ஸ்பானிஷ் விபத்து விசாரணை ஆணையத்தின் விசாரணையில், விமானத்தில் துணை விமானி 10 நிமிடங்கள் மயக்கமடைந்துள்ளார். அந்த நேரத்தில் விமானம் தன்னிச்சையாக யார் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் பறந்துள்ளது. மயக்கமடைந்த துணை விமானி தற்செயலாக கட்டுப்பாடுகளை இயக்கியது போல தோன்றினாலும், செயலில் உள்ள ஆட்டோ பைலட் (தானியங்கி விமானி) தொழில் நுட்பத்தில் தொடர்ச்சியாக நிலையான முறையில் விமானம் பறந்துள்ளது.
துணை விமானியின் 'திடீர் மற்றும் கடுமையான இயலாமை' உடன் ஒத்த ஒலிகள் இந்த நேரத்தில் ரெக்கார்டரில் பதிவு செய்யப்பட்டன. இதன் படி விமானி அவசரமாக சிகிச்சை தேவைப்படும் சுகாதார நிலையில் இருந்துள்ளார். துணை விமானிக்கு முன்பே இருந்த ஒரு நரம்பியல் பிரச்சினையின் காரணமாக அவர் மயக்கமடைந்து இருக்கிறார். அது அவருக்கு இருப்பது தெரியாது என்றும் கூறப்பட்டிருந்தது. அவரது விமான மருத்துவ பரிசோதனையின் போது அது கண்டறியப்படவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் துணை விமானியின் மருத்துவச் சான்றிதழ் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
விமானியும் துணை விமானியும் செயல்பட இயலாத போது, ஆட்டோ பைலட் தொழில் நுட்பம் விமானத்தை விமான நிலையத்தில் இறக்கி விடும். தொழில் நுட்பம் 205 பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளது. இந்த தொழில் நுட்பம் இல்லா விட்டால் மிகப்பெரிய ஒரு விபத்து நேர்ந்திருக்கும்.