கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் - அரசு விழாவாக நடத்த திட்டம்?

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் - அரசு விழாவாக நடத்த திட்டம்?

Published on

மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து கிண்டியை நோக்கிச் செல்லும் கூவம் மேம்பாலத்தில் ஏறி இறங்கியதும் புதிய மருத்துவமனை இடது பக்கத்தில் பிரம்மாண்டமான மாளிகை போல் ஜொலிக்கிறது. அடுத்த மாதம் 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்பார் என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

230 கோடி மதிப்பீட்டில் ஒரே ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை என்னும் பெயரை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை பெற்றிருக்கிறது. கொரானாவின் இரண்டாவது அலையின்போது ஆட்சிக்கு வந்த தி.மு.க, முதல் கட்டமாக தென் சென்னையில் கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளகாத்தில் புதிய பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்தது.

இதையெடுத்து சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகின. 51 ஆயிரத்து 429 சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.230 கோடி மதிப்பீட்டில், 7 மாடியுடன் 1000 படுக்கை வசதிகளை கொண்ட மருத்துவ மனை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் ஓராண்டாக தொடர்ந்து நடைபெற்று வந்து சென்ற மாதம் நிறைவடைந்தது.

கொரானா தொற்று காலத்தில் கிங் இன்ஸ்டியூட் ஆகப்பெரிய பங்களிப்பை செய்திருந்தது. தமிழ்நாட்டில் முதல் முறையாக கொரானா தொற்று, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட்டில்தான் பரிசோதனை செய்யப்பட்டது. முதல் அலை மட்டுமல்ல மூன்றாவது அலை ஓயும்வரை கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அதே பகுதியில் பன்னோக்கு மருத்துவமனை அமையும் பட்சத்தில், தென் சென்னைவாசிகளுக்கு பெரிதும் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாண்டு கால தி.மு.க ஆட்சியின் முக்கியமான சாதனையாக முன்வைக்கப்படும் பன்னோக்கு மருத்துவமனையின் திறப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்திருந்தார்கள்.

திறப்பு விழாவில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்ற மாதம் டெல்லிக்கு சென்று குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரளெபதி முர்மு விழாவில் பங்கேற்பதாக அறிவித்திருந்தார்.

கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கத்தை முன்னிட்டு திறப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் மருத்துவமனையின் இறுதிக்கட்ட பணிகள் இரவும், பகலுமாக தொடர்ந்து நடந்தன. மருத்துவமனை உள்ள கிண்டி தொழிற்பேட்டை வளாகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்நிலையில் விழா, அடுத்த மாதம் 20ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டு, தற்போது 15ஆம் தேதி திறப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படாத காரணத்தால், கிண்டி பன்னோக்கு மருத்துவமனைக்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்பட்டிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக கலைஞர் நினைவு மருத்துவமனையாக இருந்தாலும் குடியரசுத் தலைவர் பங்கேற்கும் விழா என்பதால் அரசு விழாவாக கொண்டாடப்பட இருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com