சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்தவர் அர்ஷத். இவர் பேக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். அர்ஷத் தனது தொழில் நிமித்தமாக கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் பத்து லட்சம் ரூபாயுடன் புதுக்கோட்டை பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம், நாகமலை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரியும் வசந்தி, தன்னுடன் பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி மற்றும் சீமைக்காசி ஆகிய நான்கு பேருடன் சேர்ந்து கொண்டு அர்ஷத்தை வழிமறித்து சோதனை என்கிற பெயரில், அவர் வைத்திருந்த பத்து லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து உள்ளனர்.
இதனையடுத்து அர்ஷத், அந்த பத்து லட்சம் ரூபாய் பணம் தனது தொழில் சம்பந்தமானதுதான் என்பதை நிரூபிக்க தகுந்த ஆவணங்களோடு நாகமலை காவல் நிலையத்துக்குச் சென்று பணத்தைத் திருப்பிக் கேட்டு உள்ளார். ஆனால், ஆய்வாளர் வசந்தி, அர்ஷத் சொன்னதைக் காதில் வாங்காததோடு, ‘பொய் வழக்குப் போட்டு அர்ஷத்தை சிறையில் தள்ளிவிடுவேன்’ என்று மிரட்டி உள்ளார். இதனால் அர்ஷத், தனது பணத்தை மீட்டுத் தரும்படி மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார். அர்ஷத் கொடுத்த புகாரின் அடிப்படையில் வசந்தி மற்றும் அவரது சகாக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை அறிந்த ஆய்வாளர் வசந்தி உடனே தலைமறைவாகி விட்டார். அதைத் தொடர்ந்து வசந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறை தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில் ஆய்வாளர் வசந்தி கோத்தகிரி பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் தலைமறைவாக இருப்பதைக் கேள்விப்பட்ட தனிப்படையினர் அவரை அங்கு வைத்து கைது செய்தனர். அதைத் தொடர்ந்து வசந்தி நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வழக்கைச் சந்தித்து வந்தார். ஜாமீன் பெற்ற கையோடு வசந்தி, வழக்கில் சம்பந்தப்பட்ட புகார்தாரர்களை மிரட்டியதோடு, சாட்சியங்களையும் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. மிரட்டலுக்கு ஆளான நபர் ஒருவர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், வசந்தி மீது சாட்சிகளை கலைத்தல் என்னும் பிரிவின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வசந்தியை கைது செய்ய, தென் மண்டல ஐ.ஜி.அஸ்ராக் கார்க் ஆலோசனையின்பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.
அந்தத் தனிப்படையினர் நேற்று காலை மதுரை ஊமச்சிகுளம் பகுதியிலுள்ள வசந்தியின் வீட்டுக்குச் சென்றனர். அப்போது அவர்களிடமிருந்து தப்பித்து வெளியே செல்ல முயன்றார் வசந்தி. உடனே போலீஸார் வசந்தியை சுற்றி வளைத்தனர். அப்போது அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற வசந்தியை பெண் காவல்துறை அதிகாரிகள் குண்டுக்கட்டாகத் தூக்கியும், இழுத்துச் சென்று வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். போலீஸ் ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.