பதினாறு வருட சர்வீஸில் முதல்முறை திருடனைப் பிடித்த போலீஸ்காரர்!

பதினாறு வருட சர்வீஸில் முதல்முறை திருடனைப் பிடித்த போலீஸ்காரர்!

போலீஸ் வேலை பார்த்துக்கொண்டே சினிமாவிலும் நடிப்பவர்கள் கேரள மாநிலத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ஜிபின் கோபிநாத். திருவனந்தபுரம் போலீஸ் கன்ட்ரோல் ரூமில் அதிகாரியாகப் பணியாற்றும் இவர், மின்னல் முரளி, கோல்டு கேஸ், தி கிரேட் ஃபாதர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் கேரளாவின் பட்டம் பிலாமுறி பகுதியில் வசித்து வருகிறார். வீட்டில் கார் பார்க்கிங் வசதி இல்லாததால் அவர் எப்போதுமே வீட்டுக்கு முன்பு பாதையில் தனது காரை நிறுத்துவது வழக்கம். அப்படி நேற்று பணி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அவர் வழக்கம்போல் பாதையில் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றிருக்கிறார். சற்று நேரத்தில் குழந்தைக்கு சாக்லேட் வாங்குவதற்காக வெளியே வந்த அவர், தனது காருக்கு அருகே ஓர் ஆட்டே நிற்பதைக் கவனித்திருக்கிறார். அருகில் சென்று பார்த்தபோது ஆட்டோவில் இருந்தவர் தனது காரின் ஸ்டீரியோ கிட்டை கையில் வைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறார். அதைக் கண்ட ஜிபின் கோபிநாத் உடனே அவரை கையும் களவுமாகப் பிடித்து விசாரித்ததில், அந்த நபரின் பெயர் நிதீஸ் எனவும் ஆனையறைப் பகுதியைச் சேர்ந்த அவர் கார் ஷோ ரூம் ஒன்றில் வேலை பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து தனது முகநூல் பக்கத்தில், “எனது பதினாறு வருட போலீஸ் சர்வீஸில் இதுவரை ஒரு திருடனைக் கூட நான் பிடித்ததில்லை. அதற்கான வாய்ப்பும் எனக்கு அமையவில்லை. இந்த நிலையில்தான் எனது மகனின் சாக்லேட் ஆசையை நிறைவேற்ற பக்கத்திலுள்ள கடைக்கு செல்வதற்காக வீட்டை விட்டுக் கிளம்பினேன். வெளியே வந்து பார்த்தபோது எனது கார் டிரைவர் இருக்கையில் ஒருவர் அமர்ந்திருந்தார். இவர் ஏன் எனது காருக்குள் சென்றிருக்கிறார் என அறிந்துகொள்ள அவர் வெளியே வரும்வரை காத்திருந்தேன். எனது காரில் இருந்த ஆடியோ, வீடியோ மானிட்டர் சிஸ்டத்தை கையில் எடுத்துக்கொண்டு கீழே இறங்கியவர், ஒரு புன்னகையுடன் என்னைப் பார்த்து சிரித்தார். அவரிடம், `இங்கு என்ன நடக்கிறது?' எனக் கேட்டேன். 'ஏய் ஒன்றும் இல்லை' என நல்லவரைப் போலச் சொன்னார். `கையில் என்ன?' என்று கேட்டேன். `ஸ்டீரியோ' என பதில் சொன்னவரிடம், `எங்கு போகிறீர்கள்?' எனக் கேட்டேன். எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது என்பதை உணர்ந்த அவர், 'சார் ஒரு தவறு நடந்துவிட்டது. என்னை மன்னித்துவிடுங்கள்' என்றார். உடனே அவரது காலரைப் பிடித்து அருகிலுள்ள கடையில் கொண்டுபோய் நிறுத்தினேன். அடுத்ததாக போலீஸ், பத்திரிகைகாரர்கள் எல்லோரும் வந்தார்கள், மியூசியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டார். ஒருவழியாக என் காரில் திருடியவரைப் பிடித்து பதினாறு வருட போலீஸ் சர்வீஸில் ஒரு திருடனைக்கூடப் பிடிக்கவில்லை என்ற பாவத்தை கழுவிவிட்டேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com