வேங்கைவயல் கிராமத்தில் நடந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சாதியப் பாகுபாடுகள் தமிழ்நாட்டில் தொடர்வதாக திருமாவளவன் பேசியிருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு பகுதியைச் சேர்ந்த வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர்த் தேக்க தொட்டியில் மலம் கலந்திருந்தாக வெளியான செய்தி, தமிழ்நாட்டை உலுக்கியது. பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தேக்க தொட்டியில் திட்டமிட்டு மலம் கலக்கப்பட்டதை கண்டித்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் குரல் கொடுத்தன.
புதுக்கோட்டையில் நேற்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரான திருமாவளன், 20 ஆண்டுகளுக்கு முன்னர் திண்ணியத்தில் நடந்த வன்கொடுமையை போல புதுக்கோட்டையில் நடந்திருக்கிறது. வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதைப் போன்று இழிவான செயல் வேறொன்றும் இல்லை. இது தமிழ்நாட்டிற்கு பெரும் தலைக்குனிவு, வெட்கக்கேடு என்றார்.
இறையூர் மட்டுமல்ல, புதுக்கோட்டை மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் சாதி ரீதியிலான கொடுமைகள் தொடர்வதாகவும், மாவட்டத்தை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் திருமாவளவன், தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்தார்.
தமிழகம் முழுவதுமே சாதியக் தீண்டாமைகள் இருக்கின்றன. மத்திய அரசின் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தமிழக அரசு முறையாக அமல்படுத்துவதில்லை. அரசு ஆர்வம் காட்டினாலும், அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள். இரு தரப்பும் இணைந்து நடைமுறைப்படுத்தினால் மட்டுமே சாதிக் கொடுமைகளை தடுக்க முடியும் என்றார்.
தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன், வன்கொடுமை தடுப்புச்சட்டம் தமிழ்நாட்டில் சரியாக அமல்படுத்தப்படவில்லை என்று பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்பட்டது. இதை அறிந்த திருமாவளவனும், தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு எந்தவித சிக்கலும் எப்போதும் இல்லை. எங்களது கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு என்று விளக்கம் தந்திருக்கிறார்.