
சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திட்டமிடப்பட்டு ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்டு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிங் ஆய்வக வளாகத்தில் கிண்டிக்கும் சைதாப்பேட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் ரூ.240 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கடந்த மாதமே திறப்பு விழாவிற்கு தயாராகிவிட்டது. இரண்டாண்டு கால தி.மு.க ஆட்சியின் முக்கியமான சாதனையாக முன்வைக்கப்படும் பன்னோக்கு மருத்துவமனையின் திறப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தி.மு.க முடிவு செய்திருந்தது.
திறப்பு விழாவில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்ற மாதம் டெல்லிக்கு சென்று குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரளெபதி முர்மு விழாவில் பங்கேற்பதாகவும் அறிவித்திருந்தார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கத்தை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் பங்கேற்கும் விழா என்பதால் அரசு சார்பில் நடைபெறும் விழாவாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குடியரசுத் தலைவருடன் தமிழக ஆளுநரும் பங்கேற்பதாகவும் இருந்தது. விழா அறிவிக்கப்பட்டதால் மருத்துவமனையின் இறுதிக்கட்ட பணிகள் இரவும், பகலுமாக தொடர்ந்து நடந்தன. சென்ற மாத இறுதியிலேயே மருத்துவமனை வளாகம் முழுமையாக தயாராகிவிட்டது.
குடியரசுத் தலைவரின் வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பங்கேற்க வசதியாக விழா, ஜீன் 15 அன்று தள்ளிவைக்கப்பட்டது. குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி, சென்னையில் போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சைதாப்பேட்டையிலிருந்து கிண்டி தொழிற்பேட்டையை நோக்கி செல்லும் வாகனப் போக்குவரத்து வேறு பாதையில் திருப்பி விடப்பட்டிருந்தது. ஆனாலும், குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து எந்தவித செய்தியும் வெளியாகவில்லை.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினே மருத்துவமனையை திறந்து வைப்பதாக முடிவு செய்யப்பட்டது. நேற்று நடந்த விழாவில் மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய ஸ்டாலின், திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் வரவிடாமல் தடுத்துவிட்டார்கள் என்று குறிப்பிட்டார். யாரையும் பெயர் குறிப்பிடாமல் பேசிய முதல்வர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை இதுவரை கட்டவில்லை. ஆனால், குறுகிய காலத்தில் மருத்துவமனையை நாங்கள் கட்டி முடித்திருக்கிறோம்.
ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மலரச் செய்யும் மருத்துவராக இருந்தவர் கருணாநிதி. மருத்துவக் கட்டமைப்பில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. நாட்டிற்கே பல முன்மாதிரியான திட்டங்களை திமுக கொண்டு வந்துள்ளது. மருத்துவ படிப்புகளில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மக்களை தேடி
மருத்துவம் மூலம் இதுவரை 1.46 கோடி பேர் பயனடைந்துள்ளனர் என்றவர் கலைஞர் வழியில் செயல்பட்டு சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம் என்று தெரிவித்தார்.
குடியரசுத் தலைவரை வரவிடாமல் தடுத்துவிட்டார்கள் என்று முதல்வர் பேசிய அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவை ஒரு அரசு விழாவாக நடத்த திட்டமிட்டு, இறுதியில் அரசியல் விழாவாக முடிந்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.