“நாளுக்கு நாள் தாறுமாறாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை, வரலாறு காணாத உச்சத்தைத் தொடும். ஒரு பவுன் தங்கத்தின் விலை 2 லட்சமாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது” என தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி பேட்டி ஒன்றில் இந்த அதிர்ச்சி தகவலைக் கூறி இருக்கிறார்.
பொதுவாகவே, தங்கம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் சர்வதேச சந்தை நிலவரப்படி தங்கத்தின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சமீப காலமாகவே தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. அதிலும் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துக் கொண்டேதான் இருக்கிறது. அதாவது, இந்த மாதத்தின் தொடக்கத்தில் 56,400 ரூபாயாக ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை இருந்தது. அதைத் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த தங்கத்தின் விலையால் மக்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
அந்த வகையில், மக்களை இன்னும் அதிர்ச்சிக்கு உட்படுத்தும் வண்ணம் இன்றைய தங்கத்தின் விலை இருக்கிறது. அதாவது இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 59 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதுவும் தீபாவளி பண்டிகைக் காலத்தில் ஒரு சவரன் 59 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுவதால் நகை பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. எனவே, தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று மட்டும் வரலாறு காணாத அளவில் உச்சத்தைத் தொட்டுள்ளதால் தங்க நகை வாங்கும் சக்தி பொது மக்களிடையே அதிகளவு குறைய வாய்ப்புள்ளது.
இந்நிலையில், "ஆபரணத் தங்கத்தின் விலை இன்னும் பல உச்சங்களைத் தொட வாய்ப்புள்ளது. 10 ஆண்டுகள் கழித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 25 ஆயிரம் ரூபாயாக இருக்கும்" என தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி பேட்டி ஒன்றில் இந்த அதிர்ச்சிகரமான தகவலை அளித்துள்ளார். அப்படியென்றால் ஒரு பவுன் தங்க நகை 2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுமா என்ன?