உயரும் ஆவின் பொருட்களின் விலை எதிர்க்கட்சிகள் கண்டனம்: அமைச்சர் நாசர் விளக்கம்!

Aavin
Aavin

ஆவின் பால், நெய் விலையைச் தொடர்ந்து வெண்ணெய் விலையையும் ஆவின் நிறுவனம் அதிகரித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆவின் நிர்வாகம் பல்வேறு பால் பொருட்களை தயாரித்து தமிழ் நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பால் விலை உயர்த்தப்பட்டது. அதன் பிறகு வெள்ளிக்கிழமை நெய் விலை அதிகரிக்கப்பட்டது. கடந்த 9 மாதங்களில் நெய் விலை 3 முறை உயர்த்தப்பட்டது. நெய் மற்றும் பால் விலையேற்றத்திற்கு பொது மக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்திருந்து நிலையில் ஆவின் வெண்ணை விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பு கலக்காத வெண்ணெய் 500 கிராம், ரூ. 250 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதன் விலை ரூ. 260 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உப்பு கலக்காத வெண்ணெய் 100 கிராம் ரூ. 52 ஆக இருந்த நிலையில், ரூ. 55 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உப்பு கலக்கப்பட்ட 500 கிராம் ஆவின் வெண்ணெயின் விலை ரூ. 265 ஆகவும், 100 கிராம் வெண்ணெயின் விலை ரூ. 55 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 200 கிராம் எடை கொண்ட வெண்ணெய் கட்டி ரூ. 130 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ரூ. 140 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது வெண்ணெய் கட்டி விலை கிலோ ரூ. 50 உயர்ந்துள்ளது.

இதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான ஆவின் பொருட்களை இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். பால் மற்றும் பால் பொருட்கள் மூலம் எளிய மக்கள் தங்களுக்குத் தேவையான குறைந்தபட்ச ஊட்டச்சத்தை பெற்று வந்த நிலையில், அதனையும் அவர்களுக்கு கிடைக்க விடாமல் அரசு தடுத்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

எளியோர் மற்றும் நடுத்தர வர்கத்தினருக்கு ஆவின் பொருட்களை எட்டாகனியாக்கி இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற நிலைக்கு தள்ளியுள்ளது இந்த அரசு. இன்று வெண்ணை விலையையும் கிலோவிற்கு ௹ 20 உயர்த்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, ஆரஞ்சு கலர் ஆவின் பாக்கெட் பால் விலையை உயர்த்திய பின்னர் நாள்தோறும் 5 ஆயிரம் லிட்டர் விற்பனை குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். அத்துடன், தனியார் பால் நிறுவனம் பயன்பெறும் வகையில், ஆவின் பால் விலையை உயர்த்தி, அதன் விற்பனையை குறைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார். விலை உயர்வை ஆவின் நிறுவனம். மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து விளக்கம் அளித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆவினில் நெய், வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டாலும், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பால் உற்பத்தி பொருட்கள் குறைவான விலையில் விற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com