தாறுமாறான விலையேற்றத்தில் தக்காளி விலை!

தாறுமாறான விலையேற்றத்தில் தக்காளி விலை!

தினசரி சமையலின் அவசியத் தேவையாக இருந்து வருகிறது தக்காளி. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மளிகைக் கடைகளின் சில்லறை விற்பனையில் 40 ரூபாயாக இருந்த தக்காளியின் விலை இன்று 80 ரூபாய் என்றும் இன்னும் சில கடைகளில் 100 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் இந்த திடீர் விலையேற்றத்துக்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று அதிக மழையின் காரணமாக தக்காளி விளைச்சல் குறைவது, மற்றொன்று வெளி மாநிலங்களில் இருந்து கன மழை போன்ற காரணங்களால் குறைவான வரத்து.

இதுகுறித்து மளிகைக்கடை விற்பனையாளர்களிடம் கேட்டபோது, ‘சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை சந்தையிலேயே தக்காளியின் விலை கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாங்கள் அதை வாங்கி வந்து சில்லறை விலையில் பொதுமக்களுக்கு என்ன விலைக்கு விற்பது என்றே தெரியவில்லை’ என்று கூறுகின்றனர். தக்காளியின் இந்த திடீர் விலையேற்றம் குடும்பத்தலைவிகளை பெரும் கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும், இந்த திடீர் விலையேற்றத்தால் வழக்கமாக வாங்கும் அளவைவிட, மிகவும் குறைவாகவே பொதுமக்கள் தக்காளியை வாங்கிச் செல்கின்றனர்.

தக்காளியின் இந்த திடீர் விலையேற்றம் குறித்து விசாரித்தபோது, ‘வழக்கமாக சென்னை கோயம்பேடு காய்கறி அங்காடிக்கு 80 லாரிகளில் தக்காளி வரத்து இருக்கும். ஆனால், தற்போது 35 லாரிகளில் மட்டுமே தக்காளி வரத்து இருக்கிறது’ என்று கூறப்படுகிறது. இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால் இந்த விலையேற்றம் இன்னமும் கூடுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் அஞ்சுகின்றனர். சந்தையில் தக்காளி விலை மட்டுமின்றி, பல்வேறு காய்கறிகளின் விலையும் ஏறுமுகமாகவே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினசரி சமையலின் அவசியத் தேவையான காய்கறிகளின் விலையேற்றம் பொதுமக்களுக்கு பெரும் சுமையாக மாறி இருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனே அதனைக் கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தக்காளியின் அபரிமிதமாக விளைச்சலின் காரணமாக கடும் விலை சரிவு ஏற்பட்டு விவசாயப் பெருமக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில், தற்போது, சந்தைகளில் தாறுமாறான விலையேற்றம் கண்டிருக்கும் தக்காளியின் விலையேற்றத்தைக் கேட்டு, பொதுமக்கள் பெருமூச்சு விடுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com