புதுடெல்லி மற்றும் வர்சா இடையிலான உறவு தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று பிரதமர் மோடி போலந்து செல்கிறார்.
ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவின் உறவை பலப்படுத்தும் விதமாக அமைந்த உறவுதான் போலந்து இந்தியா உறவு. ரஷ்யா உக்ரைன் போர் வலுவடையும்போது அங்குள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுத்தர போலந்து பெரிதும் உதவி செய்தது. இதனையடுத்து இன்றுவரை இரண்டு நாடுகளுக்கும் இடையே நட்பு உறவு நீடித்து வருகிறது.
இந்தியா போலந்து தூதரக உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனையடுத்து இன்று போலந்தின் அழைப்பின் பேரில் அங்கு செல்லவிருக்கிறார் மோடி. அந்நாட்டின் பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்து பேசும் மோடி, வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடுகிறார். புவிசார் அரசியல் பிரச்னைகள், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் 1979ல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் போலந்து சென்றிருந்தார். இதனையடுத்து இந்திய பிரதமர் மோடி இன்று செல்கிறார். தற்போது போலந்தில் 25,000 இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இதில் 5000 பேர் மாணவர்கள்.
அதேபோல், ஐடி, மருந்துகள், பண்ணை வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ், ஸ்டீல் மற்றும் ரசாயனங்கள் போன்ற துறை சார்ந்த நிறுவனங்களில் இந்தியா போலந்தில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுகாதாரப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் உலோகங்கள் போன்ற துறை சார்ந்த சுமார் 30 போலந்து நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன.
அதேபோல், போலந்தில் இருக்கும் தொழிலதிபர்கள் இந்தியாவுடன் வணிகத்தை வளர்த்துக்கொள்ள ஆர்வமாக உள்ளனர். இதனால், இந்த பயணம் மிகவும் முக்கியமான பயணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த பயணம் இரண்டு நாட்கள் பயணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து வரும் 23ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உக்ரைனுக்குச் செல்கிறார். இதுவும் மிகவும் முக்கியமான பயணமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.