ஆசைகள் பலவிதம்... அதில் இது ஒரு விதம்! மனிதராய்ப் பிறந்த அனைவருக்குமே ஆசைகள் இருக்கும். ஆனால் அவை நிறைவேறும் என்கிற உத்திரவாதம் இல்லை. சில ஆசைகள் உடனே நிறைவேறும். சில ஆசைகள் கானல் நீராக இறுதி வரை இருந்து மறைந்தும் போகும். எங்கே நிறைவேறப்போகிறது என்று நினைக்கும் ஆசைகள் நிறைவேறினால் அந்த சந்தோஷம் எப்படி இருக்கும்? அதை சேலத்தைச் சேர்ந்த கண்ணம்மாள் எனும் மூதாட்டியிடம்தான் கேட்க வேண்டும். ஆம் அவரின் 43 வருட கால ஆசை நிறைவேறி விட்டதே!
மனு கொடுத்து இரண்டு மணி நேரத்தில் மூதாட்டியை நேரில் வரவழைத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியுள்ளார். அவரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்கும் எனது கனவு நிஜமானது என்று அந்த மூதாட்டி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மு க ஸ்டாலின் நேற்று முன்தினம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைத்தார். பின்னர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக கருப்பூர் இன்ஜினியரிங் கல்லூரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழி நெடுக பொதுமக்கள் மற்றும் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தபடி இருந்தனர்.
சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள ஸ்டேட் வங்கி காலனி அருகே அய்யம்பெருமாள்பட்டியை சேர்ந்த கண்ணம்மாள் எனும் மூதாட்டி சாலையோரம் நின்று கொண்டு காரை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவரைப் பார்த்ததும் வாகனத்தை நிறுத்தும்படி கூறிய முதலமைச்சர் அந்த மூதாட்டியை அழைத்து அவர் தந்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அந்த மனுவில் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை. தினமும் தொலைக்காட்சியில் உங்களை பார்ப்பேன். சென்னைக்கு என்னால் வர இயலவில்லை என்று மூதாட்டி கூறியிருந்தார். நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வை முடித்து வந்த முதலமைச்சர் அந்த மூதாட்டியின் மனுவை படித்துப் பார்த்தார். உடனே அந்த மூதாட்டியை நேரில் அழைத்து வர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து அந்த மூதாட்டியை அஸ்தம்பட்டியில் முதல்வர் இருந்த பயணியர் மாளிகைக்கு அழைத்து வந்தனர்.
அவரை வரவேற்ற மு க ஸ்டாலின் மூதாட்டியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் அவரிடம் நலம் விசாரித்தார். இந்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்திலும் முதலமைச்சர் பகிர்ந்துள்ளார். இது குறித்து மூதாட்டி கண்ணம்மாள் கூறும் போது “43 ஆண்டுகளாக திமுகவில் உள்ளேன். எனது வீட்டு சுவரில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் உருவப்படங்கள் வரைந்து உள்ளேன். எனக்கு எழுத படிக்கத் தெரியாது. தினமும் அவரை டிவியில் பார்த்து விடுவேன். இந்த முறை சேலத்துக்கு வந்ததும் எனது பேரன் மூலம் மனு எழுதி அவரிடம் கொடுத்தேன். முதலமைச்சரை நேரில் பார்த்ததும் மகிழ்ச்சியில் பேச முடியாமல் திக்கு முக்காடிப் போனேன். மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் என்னை நேரில் வரவழைத்து முதலமைச்சர் போட்டோ எடுத்துக் கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது நீண்ட கால கனவு நனவாகி இருக்கிறது. கருணாநிதி இருந்தபோது அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் சந்திக்க முடியவில்லை. முதல்வரிடம் கோரிக்கை மனுவும் அளித்து உள்ளேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
ஆனாலும் கனவுகள் நிஜமாகும் தருணங்கள் இனிமையானவைதான். மூதாட்டியின் மகிழ்வான புன்னகை அந்த இனிமைக்கு சான்று.