சுற்றுலாப் பயணிகளை கோபத்தில் துரத்திய காண்டாமிருகம்! தப்பித்தார்களா?

சுற்றுலாப் பயணிகளை கோபத்தில் துரத்திய காண்டாமிருகம்! தப்பித்தார்களா?
Published on

தென்னாப்பிரிக்காவில் உள்ள தேசிய வனவிலங்கு பூங்காவை ஜீப்பில் சுற்றிப்பார்க்கச் சென்ற சுற்றுலாப் பயணிகளை காண்டாமிருகம் ஒன்று 1 கி.மீ. தொலைவு விரட்டிச் சென்று துரத்தியடித்தது.

இது தொடர்பான விடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கிரேட்டர் குரூகர் தேசிய வனவிலங்கு பூங்கா உள்ளது. அனஸ்தாசியா சாப்மன் என்ற பெண் தனது நண்பர்களுடன் பூங்காவை சுற்றிப்பார்க்க ஜீப்பில் சென்றார். அப்போது ஜீப்பில் சவாரி சென்ற சுற்றுலாப் பயணிகளை பார்த்து கோபமடைந்த காண்டாமிருகம் அவர்களை குண்டும் குழியுமாக இருந்த மண் சாலையில் 1 கி.மீ. தொலைவு வரை விரட்டிச் சென்றது.

புல்தரையில் மேய்ந்து கொண்டிருந்த காண்டாமிருகம், அந்த வழியாக ஒரு ஜீப்பில் சிலர் வருவதைப் பார்த்தது. பின்னர் திடீரென ஜீப்பை துரத்த ஆரம்பித்தது. கரடுமுரடாக இருந்த மண் சாலையில் ஜீப்பை டிரைவர் வேகமாக ஓட்டிச் செல்லமுடியாத நிலையில் திக்கித் திணறி ஒருவழியாக தப்பித்து வந்தனர் சுற்றுலாப் பயணிகள்.

குரூகர் பூங்காவில் நடந்த அந்த திகில் சம்பவத்தை அனஸ்தாசியா சாப்மன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். விடியோவின் கீழ் “ஜீப்பை துரத்திடியடித்த காண்டாமிருகம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

காண்டாமிருகத்தின் செயல் எங்களுக்கு திகிலூட்டியது. சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு எங்களை துரத்தி வந்தது. எங்கள் வழிகாட்டி கரடுமுரடான மண் சாலையில் ஜீப்பை வேகமாக ஓட்டிவந்தார். ஒருவழியாக நாங்கள் பாதுகாப்பாக மீண்டோம் என்று குறிப்பிட்டுள்ளார் சாப்மென்.

பொதுவாக காண்டாமிருகங்கள் இப்படி நடந்து கொள்வதில்லை. ஆனால், இது வழக்கமானதாக இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. இத்துடன் நான் இதுவரை 5 திகில் சம்பவங்களை எதிர்கொண்டுள்ளேன். நாம் எல்லாம் விருந்தாளிகள்தான். விலங்குகளின் எல்லைக்குள் செல்லும்போது நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அந்த வழிகாட்டி கூறியுள்ளார்.

இந்த விடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒருவர், “காண்டா மிருகங்கள் உடல் பருமனுடன் அதிக எடைகொண்டதாக இருக்கும். எனவே அவற்றால் வேகமாக ஓடமுடியாது என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால், இந்த விடியோவை பார்த்தபோது எனது எண்ணம் தவறானது என புரிந்து கொண்டேன். சிங்கத்தைவிட காண்டாமிருகத்தால் பலர் உயிரிழந்துள்ள தகவலை படிக்கும்போது நெஞ்சம் படபடக்கிறது” என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

விலங்குகளை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும். அதனை நாம் நெருங்கக்கூடாது, அநாவசியமாக துன்புறுத்தக்கூடாது. தங்களுக்கு உரிய இடத்தில் யாராவது ஊடுருவினால் அவற்றுக்கு கோபம் வருவது சகஜம்தான் என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படித்தான் சமீபத்தில் மேற்குவங்க மாநிலத்தில் ஜல்தாபாரா தேசிய பூங்காவில் சுற்றுலா வந்த பயணிகள் காண்டாமிருகத்தை படம்பிடித்துக் கொண்டிருந்தனர். திடீரென அது கோபமடைந்து திறந்த ஜீப்பை நோக்கி துரத்தியது. அவசரத்திலும் பயத்திலும் டிரைவர் ஜீப்பை பின்னோக்கி இயக்கினார். இந்த நிலையில் அந்த ஜீப் ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com