கடந்த இரண்டு மாதங்களாக தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒரு ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் விரிவான விளக்கத்தை தந்திருக்கிறார். அதில் தமிழக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ள ஆளுநர், திராவிட மாடல் என்னும் கருத்தாக்கத்தை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
தமிழக ஆளுநர்கள் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளிப்பது அபூர்வமான விஷயம். அதில் அரசியல் கருத்துகளோ, தனிநபர் விளக்கங்களோ பகிர்ந்து கொள்ளப்பட்டதில்லை. ஆனால், நேற்று வெளியான ஆளுநரின் பேட்டி பல்வேறு சர்ச்சைகளையும் விவாதங்களையும் கிளப்பியிருக்கிறது. குறிப்பாக திராவிட மாடல் என்னும் சொல், ஆளுநருக்கு உவப்பானதாக இருக்கவில்லை என்பதை பேட்டியின் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில் ஆளுங்கட்சி தரப்பிலிருந்து ஆளுநரின் கருத்துக்களுக்கு கடுமையான பதிலடி தரப்படும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், ஆளுங்கட்சி தரப்பிலிருநது முன்வைக்கப்பட்ட எதிர்வினை தி.மு.க கூட்டணிக்கட்சியினருக்கு திருப்திகரமாக அமையவில்லை என்கிறார்கள். ஆளுரின் பேச்சு குறித்து தி.மு.கவின் அனைத்து கூட்டணிக்கட்சிகளும் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளன. ஆனால், தி.மு.கவிடமிருந்து பெரிய அளவில் கண்டனங்கள் எழவில்லை என்கிறர்கள்.
ஆளுநரின் பேட்டி வெளியானது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்திருக்கிறார். அதில் விரிவான விளக்கங்கள் இடம்பெறவில்லை என்கிறார்கள். ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்துள்ள அமைச்சர், ஆளுநர் குறிப்பிட்டுள்ள பிரச்னைகள் பற்றி விரிவான பதிலளிக்காதது தி.மு.கவின் கூட்டணிக்கட்சியினர் மத்தியில் சங்கடத்தை ஏற்படுததியிருக்கிறது. ஆளுநரின் விமர்சனத்திற்கு தகுந்த பதிலடி தரவேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
கவர்னர் பதவிக்கு அழகில்லாத, அடிப்படையில்லாத செயல்களை மட்டுமே செய்து வருகிறார் என்கிற விமர்சனம் கடந்த இரண்டு மாதங்களாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது. இது தவிர ஆரியத்துக்கு ஆலாபனை பாடுகிறார். திராவிடத்துக்குத் தவறான பொருள் சொல்கிறார் என்றெல்லாம் மேம்போக்கான பதில்கள் மட்டுமே தரப்பட்டிருக்கின்றன என்கிறார்கள்.
40-க்கும் மேற்பட்டோரின் மரணத்துக்குக் காரணமான ஆன்லைன் ரம்மி தடை மசோதாவைக்கூட பல மாதங்கள் தனது நாற்காலிக்கு கீழே போட்டு உட்கார்ந்து கொண்டிருந்தார் என்று அமைச்சர் மீண்டும் விமர்சனம் வைத்தாலும் ஆளும் தரப்பிலிருந்து எத்தகைய விளக்கங்கள் தரப்பட்டன என்பது பற்றி குறிப்பிடவில்லை.
மாறாக ஆளுநரோ, ஒவ்வொரு ஆண்டும் தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களின் எண்ணிக்கை, அதன் நிலவரம் பற்றி விரிவாக பேசி, தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார். தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும என்று ஆளுநரின் வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டதாக ஆளுநர் தன்னுடைய பேட்டியில் அழுத்தமாக பதிவு செய்கிறார். ஆனால், ஆளுங்கட்சி தரப்பிடமிருந்து விளக்கமில்லை.
ஆளுநர் கமலாலயத்தில் இருக்கவேண்டியவர். ஏனோ, ராஜ்பவனில் இருந்துகொண்டு அரசியல் செய்துவருகிறார் என்று அரசியல் விமர்சனத்தோடு ஆளும் தரப்பு அவசர அவசரமாக கடந்து ஆளுநரின் பேட்டியை கடந்து செல்ல நினைக்கிறது. ஆனால், ஆளுநர் பேட்டியோ சட்டமன்ற மரபு தொடங்கி சிதம்பரத்தில் நடைபெற்ற சம்பவங்கள் வரை பல விஷயங்களை தொட்டுச் செல்கிறது. இதற்கெல்லாம் விரிவான பதில் தரப்போவது யார் என்கிற கேள்வி தி.மு.க கூட்டணியினர் மத்தியில் எழுந்திருக்கிறது