வாழும்போதே சாகும் நாள் தெரிந்த சோகம்; நெஞ்சை உருக்கும் வேதனை மரணம்!

வாழும்போதே சாகும் நாள் தெரிந்த சோகம்; நெஞ்சை உருக்கும் வேதனை மரணம்!
Published on

ரு மனிதன் தன் இறப்பை குறித்த பிரபஞ்ச சக்தியின் இரகசியத்தை அறிய முடியாமல் இருப்பதாலேயே அவன் நிம்மதியாக வாழ்க்கையை கழிக்க முடிகிறது. இன்பமோ துன்பமோ வருவதை ஏற்று மரணம் வரும்வரை வாழ வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்றாலும் அந்த மரணம் நேரும் நேரத்தை அறியும் ஒருவர் என்ன செய்வார்? தன்  மரணத்தை நினைத்து நினைத்து ஒடுங்கிப் போவாரா? அல்லது எதிர்த்துப் போராடுவாரா? இதோ இந்த துணிச்சல் மருத்துவரைப் போல தன் கடமைகளை முடித்து மரணத்தை வரவேற்பாரா? நெஞ்சை உலுக்கும் வேதனை மரணத்தின் செய்தி இதோ.


      நுரையீரல் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட தெலுங்கானாவைச் சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவர் தனது மரணத்தை துணிச்சலுடன் எதிர்கொண்ட சம்பவமே நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்துள்ளது. தனக்கான சாவை தெரிந்து கொண்டு அதற்கு முன் தான் செய்ய வேண்டிய கடமைகளை முடித்து இன்முகத்தோடு மரணத்தை வரவேற்ற இந்த மருத்துவரின் கதை இந்திய மக்களுக்கு மட்டுமல்ல படிக்கும் எந்நாட்டவர்க்கும் கண்ணீரை வரவைக்கும். 

      தெலுங்கானாவின் கம்பம் மாவட்டத்தின் சீனிவாஸ் நகரை சேர்ந்த அந்த மருத்துவரின் பெயர் யெபூரி ஹர்ஷவர்த்தன். வயது 33 . இவர் ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பொது மருத்துவராக பணியாற்றி வந்தார். எந்த வித தீய பழக்கமும் இல்லாத இவர் உடற்பயிற்சி செய்து உடலையும் கட்டுக்கோப்பாகவே வைத்திருந்தார். அப்படி இருந்தவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் உடற்பயிற்சி கூடத்தில்  திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனையில் பரிசோதித்தபோது அவருக்கு நுரையீரல் புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டறியப் பட்டது. அதுவும் நான்காவது நிலையை எட்டி இருந்தது என்ற தகவலைக் கேட்டு துடித்துப் போனார். காரணம் நோயல்ல அவரின் இளமை மனைவிதான். அந்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி தான் சிந்து என்ற பெண்ணை கரம்பிடித்து இருந்தார் அவர். மனைவியையும் ஏப்ரலில் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்ல நினைத் திருந்தார். ஆனால் கொரோனா ஊரடங்கும் விமான போக்குவரத்து முடக்கமும் அவர்களை சேர விடவில்லை.

         ஹர்ஷவர்தன் ஆஸ்திரேலியாவிலும் சிந்து கம்பத்திலும் இருந்தனர். ஹர்ஷவர்த்தனை புற்றுநோய் தாக்கியது குறித்து அறிந்த மனைவி சிந்து மற்றும் அவரது பெற்றோரான ராமராவ் பிரமிளா தம்பதியும் வேதனையில் துடிதுடித்தனர். ஆனால் அவர்களுக்கு தைரியமூட்டிய ஹர்ஷவர்தன்,  ஆஸ்திரேலியாவிலேயே தனது  சிகிச்சையைத்  தொடர்ந்தார். அதற்கான பலனும் அவருக்கு கிட்டியது. சுமார் இரண்டு ஆண்டு கால தீவிரப் போராட்டத்திற்கு பின் அவர் குணமடைந்தார். புற்று நோயை வென்று விட்டதாக டாக்டர் ஹர்ஷவர்த்தனும் அவரது குடும்பத்தினரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவர்களது மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்க வில்லை.

        எட்டே மாதங்களில் மீண்டும் புற்றுநோய் தனது கோர முகத்தைக் காட்டியது. இந்த முறை முன்பை விடவும் மிகவும் தீவிரமாகவே பாதித்திருந்தது. இந்த தகவல் மருத்துவர் ஹர்ஷவர்தன் மற்றும் அவரது குடும்பத்தி னருக்கு இடியாக இறங்கியது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களும் கையை விரித்துவிட்டனர். அது மட்டும் இன்றி அதிகபட்சமாக 2023 மார்ச் 27ஆம் தேதி வரையே டாக்டர் ஹர்ஷவர்தன் உயிரோடு இருப்பார் என்று மரண தேதியையும் குறித்து விட்டனர். தனது வீட்டு வாசலுக்கே மரணம் வந்துவிட்டதையும் தனது நாட்கள் எண்ணப் படுவதையும் ஹர்ஷவர்தனும் உணர்ந்துவிட்டார்.

       ஆனால் இந்த சோகம் ஒருபுறம் இருக்க அதை மறந்துவிட்டு மரணத்திற்கு முன் தான் முடிக்க வேண்டிய கடமைகளை உடனடியாக செய்ய வேண்டும் என முடிவு செய்தார். கடமை என்றதும் முதலில் அவருக்கு தோன்றியது தனது இளம் மனைவியின் எதிர்காலம். தனது மறைவுக்குப் பின் இளம் வயதிலேயே அவர் தனித்து விடப்படுவதை  அவர் விரும்பவில்லை. எனவே அவசர அவசரமாக அவருக்கு விவாகரத்துக்கு ஏற்பாடு செய்தார். கணவரின் பரிதாப நிலை ஒருபுறம் சிந்துவை நிலைகுலைய செய்திருந்த நிலையில் விவாகரத்து முடிவு மேலும் சிந்துவை நிலைகுலைய வைத்தது. ஆனால் அவரை சமாதானப்படுத்தி ஹர்ஷவர்தன் விவாகரத்து செய்ததுடன் அவரது எதிர்காலத்துக்கு தேவையான பொருளாதார வசதிகளையும் ஏற்பாடு செய்தார்.

     அடுத்ததாக தனது மரணத்திற்குப் பின் தனது உடலை சொந்த ஊர் கொண்டு செல்வதில் எந்தவித இடையூறும் இருக்கக் கூடாது என்பதற்காக அங்குள்ள நண்பர்கள் மற்றும் வக்கீல் ஒருவரை துணைக்கு வைத்துக்கொண்டு சட்ட நடவடிக்கைகளை செய்து முடித்தார். மேலும் தனது உடலை எடுத்துச் செல்வதற்காக சவப்பெட்டி ஒன்றையும் வாங்கி தனது நண்பர்களிடம் ஒப்படைத்தார். இதற்கிடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சொந்த ஊருக்கு வந்து 15 நாட்களை தனது பெற்றோரிடம் கழித்து விட்டு அவர்களிடம் இருந்து  பிரியா விடை பெற்று ஆஸ்திரேலியா சென்றார். தனது இறுதி நாட்களில்தான் அனுபவிக்கும் வேதனையை தனது குடும்பத்தினர் காணக்கூடாது என்பதற்காகவே பிடிவாதமாக அவர் ஆஸ்திரேலியா புறப்பட்டார். அதற்கேற்றவாறு அவருக்கு கடந்த சில மாதங்களாக உயிர் போகும் வலி வாட்டி வதைத்து வந்துள்ளது.

ஹர்ஷவர்தன்
ஹர்ஷவர்தன்

 இறுதியாக கடந்த மாதம் 23ஆம் தேதி பிரஸ்பேனில் தான் மருத்துவ சேவை செய்யும் ஆசிரமம் ஒன்றுக்கு சென்று அங்குள்ளவர்களிடம் தான் இந்தியா செல்வதாக கூறி பிரியாவிடை பெற்றுள்ளார். அவர் எதிர்பார்த்து இருந்த அந்த துரதிஷ்ட நாளும் மறுநாளே வந்ததுதான் கொடுமை. ஆம் மார்ச் 24 ஆம் தேதி காலையிலேயே அவருக்கு உச்சகட்ட வலி ஏற்பட்டது. தனது மரணம் நெருங்கி விட்டதை உணர்ந்தவர் உடனடியாக அங்குள்ள நண்பர்களை அழைத்தார். இன்னும் ஒரு மணி நேரத்தில் தனது நிரந்தர தூக்கம் தன்னை ஆட்கொள்ள இருப்பதாக கூறி வரவழைத்தார். அவர்கள் வந்தவுடன் அனைவரும் சேர்ந்து காலை உணவை உண்டனர் சிறிது நேரத்திலேயே அவர் இந்த உலகை விட்டு மறைந்தார்.

      இறப்பதற்கு முன்னரே அவர் செய்து வைத்த ஏற்பாடுகளின்படி அவரது உடல் சொந்த ஊரான கம்பத்துக்கு கொண்டு வரப்பட்டு கடந்த ஐந்தாம் தேதி தகனம் செய்யப்பட்டது. நெஞ்சை உருக்கும் மகனின் மரணத்தகவல்களை கண்ணீருடன் வெளியிட்ட மருத்துவர்  ஹர்ஷவர்தனின் பெற்றோர் தங்கள் மகன் சாவை துணிவுடன் எதிர்கொண்டதாக கூறினர். 

     வாழும்போதே சாகும் நாளைத் தெரிந்து கொண்ட நிலையிலும் கலங்காமல் தன் கடமைகளை தளராமல் முடித்து இன்முகத்துடன் மரணத்தை வரவேற்ற மருத்துவருக்கு  நாமும் மனதார அஞ்சலி செலுத்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com