ஹமாஸ் பயங்கரவாதிகள்  ரகசிய சுரங்கம் பற்றி தெரியுமா?

The secret tunnel of Hamas terrorists.
The secret tunnel of Hamas terrorists.
Published on

டந்த பத்து நாட்களாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையேயான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் குழுவினரின் மர்மமான சுரங்கங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுவாக, தாக்குதல் என்றாலே வான்வழி தாக்குதல், தரைவழி தாக்குதல், கடல்வழி தாக்குதல் என்றுதான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், நிலத்துக்குக் கீழே சுரங்கம் அமைத்து தாக்குவது பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஹமாஸ் குழுவினரின் நிலத்துக்குக் கீழே சுரங்கம் வைத்து எதிரிகளை தாக்கும் திட்டம் புதிய யுக்தியாக இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு காசாவில் கடத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட சுரங்கங்கள், ஹமாஸ் குழுவினரின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு யுத்தத்துக்காக பயன்படுத்தும் சுரங்கங்களாக அவை மாறியுள்ளன.

கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலிலும் இத்தகைய சுரங்கங்கள் முக்கியப் பங்கு வகித்ததாகத் தெரிகிறது. குறிப்பாக, இஸ்ரேல் முதல் எகிப்து வரை நீண்டு கிடக்கும் இத்தகைய சுரங்கங்களால், ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்கு உள்ளும் ஊடுருவி தாக்குதல் நடத்துவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு, ‘ஹமாஸ் குழுவின் 100 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சுரங்கத்தை நாங்கள் அழித்துவிட்டோம்’ என இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்தது. ஆனால், ‘அது வெறும் 5 சதவிகித சுரங்கம்தான். எங்களுடைய சுரங்கப் பயன்பாடு 500 கிலோ மீட்டருக்கும் மேலானது’ என ஹமாஸ் படையினர் தெரிவித்தனர். இந்தத் தகவல் உலக நாடுகளை வியக்கச் செய்துள்ளது. காசாவில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், பொது மக்கள் பயன்படுத்தும் கட்டடங்கள், கல்வி நிலையங்கள் போன்றவற்றை இஸ்ரேல் வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்குகிறது என குற்றச்சாட்டு கூறப்பட்டு வரும் நிலையில், அதற்குக் கீழே உள்ள பல நூறு கிலோ மீட்டர் அளவிலான சுரங்கத்தைத்தான் நாங்கள் அழிக்கிறோம் என இஸ்ரேல் படையினர் தெரிவித்தனர்.

இந்த சுரங்கங்கள்தான் ஹமாஸ் படையினரின் கட்டுப்பாட்டு அறையாகவும், ஆயுதக் கிடங்காகவும், ஆலோசனைகள் பெறும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஹமாஸ் படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேல் பொதுமக்களும் இத்தகைய சுரங்கங்களில்தான் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ரகசியங்களை ஒளித்து வைத்திருக்கும் ஹமாஸ் குழுவின் சுரங்கப்பாதைகள், உண்மையிலேயே எவ்வளவு தொலைவுக்கு நீண்டுள்ளது என்பது இன்று வரை யாருக்கும் தெரியாத புதிராகவே இருந்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com