The Stanford Prison Experiment: மனிதனால் சூழ்நிலைக்கு ஏற்ப மாற முடியும்.

The Stanford Prison Experiment: மனிதனால் சூழ்நிலைக்கு ஏற்ப மாற முடியும்.

The Stanford Prison Experiment என்பது 1971 ஆம் ஆண்டு உளவியல் நிபுணர் ஜிம் என்பவரால் நடத்தப்பட்ட ஒரு பிரபலமான ஆய்வாகும். இந்த ஆய்வானது கைதிகள் மீதான சிறைக் காவலர்களின் ஆதிக்கத்தின் உளவியல் விளைவுகளைக் கண்டறியும் நோக்கில் மேற்கொள்ளப் பட்டது. இந்த சோதனை முதலில் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், இதில் பங்கேற்றவர்களின் தீவிரமான நடத்தை மாற்றம் காரணமாக ஆறு நாட்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது. 

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 75 தன்னார்வலர்கள் கொண்ட குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 24 கல்லூரி மாணவர்களை பங்கேற்கச் செய்தனர். இதில் பங்கேற்றவர்களை காவலர்கள் மற்றும் கைதிகள் என இருப்பிரிவாகப் பிரித்து ஒரு நாளைக்கு 15 டாலர்கள் வீதம், பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.  ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் உளவியல் கட்டிடத்தின் அடித்தளத்தில் போலியான சிறை போன்ற அமைப்பை உருவாக்கினர். இந்த சிறைச்சாலை உண்மையான சிறையில் சூழலை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, செல்கள் காவல் நிலையங்கள் மற்றும் ஒரு முற்றத்துடன் உருவாக்கப்பட்டது. 

இதில் காவலர்களாக பங்கேற்றவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படவில்லை என்றாலும், சிறையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்ற கட்டளை விடுக்கப்பட்டது. காவலர்கள் என்றால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி எதுவுமே அவர்களுக்கு கற்றுத் தரப்படவில்லை. இது அவர்களின் அதிகாரத்தை செயல்படுத்துவதற்கான சொந்த யுக்திகளை அவர்களே உருவாக்க வழி வகுத்தது. மறுபுறம், கைதிகள் காவலர்களுக்குக் கீழ்ப்படிந்து சிறையின் விதிகளை பின்பற்ற வேண்டுமென கூறப்பட்டது. 

இந்த ஆய்வு தொடங்கிய சில தினங்களிலேயே காவலர்களுக்கான அதிகாரம் கொடுக்கப்பட்டவர்கள், விரைவில் அதை துஷ்பிரயோகம் செய்து சர்வாதிகாரிகளாக மாறினர். கைதிகளை அவமானப்படுத்தவும் இழிவுப்படுத்தவும் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தினர். மேலும் கைதியாக இருந்தவர்கள் அவர்களின் கொள்கைகளுக்கு எதிராக சம்பவங்கள் நடந்தபோதிலும், கீழ்படிதலுடன் நடந்து கொண்டனர். 

இந்த ஆய்வானது இதில் பங்கேற்றவர்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிகாரம் கிடைத்தால் ஒரு மனிதன் எப்படி நடந்து கொள்கிறான், அதிகாரத்தை எதிர்த்து ஒரு மனிதனால் எப்படி போராட முடியாமல் போகிறது என்பதை இந்த உளவியல் ஆய்வானது வெட்ட வெளிச்சம் போட்டுக்காட்டியது. புதிய மற்றும் மன அழுத்தமான சூழ்நிலைகளில் மக்கள் விரைவில் எதை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதை இந்த ஆய்வு நிரூபித்தது. 

இருப்பினும் இந்த சோதனை பல காரணங்களுக்காக விமர்சிக்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் தங்கள் முழு அனுமதியின்றி உடல் மற்றும் உளவியல் அழுத்தத்திற்கு ஆளானதால், இந்த ஆய்வு நெறிமுறையற்றது என்று பலர் வாதிட்டனர். ஆய்வில் சரியான மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு இல்லாததால் காவலர்கள் நடத்தை தவறாக மாற அது அனுமதித்தது என விமர்சனங்கள் எழுந்தன. 

ஆனாலும், ஸ்டான்போர்ட் சிறைச்சாலை பரிசோதனை யானது உளவியல் துறையில் ஒரு முக்கியமான ஆய்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வினால், அதிகாரம் மற்றும் கீழ்ப்படிதலின் உளவியல் விளைவுகளைப் பற்றிய கூடுதல் ஆராய்ச்சிகளை செய்யத் தூண்டியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com