
கலிபோர்னியா மாகாணத்தில் தற்போது கடுமையாக புயல் தாக்கி வருவதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமாக கலிபோர்னியா விளங்குகிறது. இங்கு தற்போது குளிர்கால புயல் படுவேகமாக வீசி வருகிறது. இந்த மோசமான புயலால் கடந்த 2 ஆண்டுகளில் காட்டுத் தீயில் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கையை விட தற்போது பலியானோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்த புயலானது இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது.
கலிபோர்னியா ஆளுநரான கவின் நியூசோம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
கலிபோர்னியாவில் குளிர்கால புயலானது இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாகவும், தற்போது அதிகாரிகள் அவசரக்கால ஆலோசனையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு கனமழையுடன் கூடிய புயல்கள் வேகமாக தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், ரோடுகளில் பள்ளம் ஏற்பட்டு பலத்த சேதங்களும் ஏற்பட்டு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. அதோடு, பெரும்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதோடு, சாலைகள் மூடல், மின் தடைகள் என மக்கள் தவித்துவரும் நிலையில், மாகாணத்தின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் வெளியேறி வருகின்றனர். அதேபோல் தெற்கு கலிபோர்னியாவின் மான்டெசிட்டோவில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு பெரும்பகுதிகளில் பலத்த கனமழை பெய்துவரும் நிலையில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, இந்த கனமழை மேலும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.