அதிமுக கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

அதிமுக கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!
Published on

2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் இப்போதைய தமிழக சபாநாயகர் அப்பாவுவும், அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரையும் போட்டியிட்டனர். இதில் இன்பதுரை 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தனக்கு விழுந்த தபால் வாக்குகளை நிராகரித்து, தான் தோல்வி அடைந்ததாகக் கூறியதை எதிர்த்து அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். அதனால் கடைசி சில சுற்று வாக்குகளை மறுபடியும் எண்ணுவதோடு, தபால் வாக்குகளையும் மீண்டும் எண்ண வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அதிமுகவின் இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடத் தடை விதித்து இருந்தது. இதனால் ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கே.கவுல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இன்பதுரை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த விஷயம் முடிந்து போய்விட்டது. மேலும் 2021ம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு அப்பாவு வெற்றி பெற்று சபாநாயகராகவும் ஆகிவிட்டார். அதனால் மேற்கொண்டு இதை விசாரிக்க வேண்டியதில்லை என்பதால் இந்த வழக்கை முடித்துவைக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

ஆனால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அப்பாவு தரப்பு வழக்கறிஞர் பி.வில்சன், ‘2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் உண்மையிலேயே வெற்றி பெற்றது யார் என்பதை இந்தக் கோர்ட் தெரிவிக்க வேண்டும். அது மட்டுமின்றி, இந்த வழக்கு விஷயத்தில் முடிவு தெரியாததால் இன்பதுரை தற்போது வரை சட்டமன்ற உறுப்பினருக்கான பென்ஷன் தொகையைப் பெற்று வருகிறார். எனவே, இந்த வழக்கை முடித்து வைக்கக்கூடாது. மாறாக, இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு உத்தரவை இந்த கோர்ட் அறிவிக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு நடைபெற்ற ராதாபுரம் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை முடிவு குறித்து அதிமுகவை சேர்ந்த இன்பதுரை சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதி மன்றம் நிராகரித்தது. மேலும், இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் கூறிய உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com