ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு..!

ration card tn govt
ration card tn govt
Updated on

தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து, நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மிக முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து தகுதியான பயனாளிகளுக்கு தாமதமின்றி, அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் ரேஷன் அட்டைகளை வழங்க வேண்டும் என தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளதையடுத்து, அதை சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி சுமார் 4 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள் பல்வேறு சரிபார்ப்பு நிலைகளில் நிலுவையில் உள்ளன. புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் அனைத்தும் உரிய ஆய்வுக்குப் பிறகு விரைவாக பரிசீலிக்கப்பட்டு தகுதியான குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் உறுதியளித்தார்.

இலவச மற்றும் மானிய விலையிலான உணவுப் பொருட்கள் மட்டுமின்றி, பொங்கல் பரிசுத் தொகுப்பு, பேரிடர் நிவாரண உதவிகள் மற்றும் அரசு வழங்கும் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் பெற ரேஷன் கார்டு தான் பிரதான சான்றாக விளங்குகிறது.

இந்நிலையில், ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்களின் பெயரை சேர்ப்பது குறித்தும் பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. திருமணம், குழந்தை பிறப்பு போன்ற காரணங்களால் குடும்பத்தில் புதிய உறுப்பினர்கள் சேரும் போது, அவர்களின் பெயரை ரேஷன் அட்டையில் பதிவு செய்வது அவசியமானதாகும். இதன்மூலம் குடும்ப அங்கத்தினர்களுக்கு அரசு வழங்கும் மானியப் பொருட்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பு, பேரிடர் நிவாரண உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க உதவும்.

குறிப்பாக தமிழக அரசின் மிக முக்கியமான திட்டமான 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஸ்மார்ட் ரேஷன் கார்டு மிக அத்தியாவசியமான ஆவணமாகும். எனவே, உணவுத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் விரைவில் புதிய ரேஷன் கார்டுகளைப் பெறப்போகும் லட்சக்கணக்கான குடும்பங்கள், அடுத்த கட்டமாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தடையின்றி விண்ணப்பிப்பதற்கு வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளை டிஜிட்டல் முறையில் எளிமைப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. பெயர் திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் புதுப்பித்தல், பழைய கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றுதல் போன்ற சேவைகளும் படிப்படியாக ஆன்லைனில் மேம்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பொதுமக்கள் அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய நிலை குறைந்து, சேவைகள் விரைவாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com