உச்சநீதிமன்றத்தில் "தி கேரளா ஸ்டோரி" விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்!

உச்சநீதிமன்றத்தில் "தி கேரளா ஸ்டோரி" விவகாரத்தில்  தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்!

’தி கேரளா ஸ்டோரி’ பட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளில் கடந்த மே 5-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'.

'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு, தடை மற்றும் மறைமுக தடை விதிக்கப்பட்டதாக, தயாரிப்பாளர் தாக்கல் செய்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மேற்குவங்கத்தில் தடை செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு, தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் கடந்த 12ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது படத்திற்கு ஏன் தடை விதிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ”தி கேரளா ஸ்டோரி” திரையிடப்பட்ட திரையரங்குகள் தாக்கப்பட்டது குறித்தும் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும்போது நடவடிக்கை எடுக்காமல் தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருந்தது என்றும் பொது அமைதி தொடர்பான விவகாரம் என்பதால், திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறதா என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

supreme court
supreme court

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தடை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. “ தமிழ்நாட்டில் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை அரசு தடை செய்யவில்லை. மாநிலம் முழுவதும் மொத்தமாக 19 திரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டது. மேலும் திரைப்படம் வெளியான திரையரங்குகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

படத்திற்கு எதிராக போராடியவர்களின் மீது சென்னை மற்றும் கோவையில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம், அறிமுகம் இல்லாதவர்களின் நடிப்பு, போதுமான வரவேற்பின்மை ஆகியவற்றால், திரையரங்கு உரிமையாளர்களே 7ஆம் தேதி தொடங்கி திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக தோன்றுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் திரையரங்க உரிமையாளர்களே படத்தை திரையிடவில்லை. வரவேற்பு இல்லை என்பதால் திரையரங்குகளில் படத்தை நீக்கி விட்டு வேறு படத்தை திரையிடுகிறார்கள். அதனால் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலையீடு எந்த இடத்திலும் கிடையாது என தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com