பொங்கல் திருநாளைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கரூர் மாவட்டம், தோகைமலை அருகே ராச்சாண்டர் திருமலையில் அக்கிராம பொதுமக்கள் சார்பாக நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த வீர விளையாட்டில் கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்த 23 வயதாகும் சிவக்குமார் என்பவரும் கலந்து கொண்டார். இவர் காளையை அடக்க முயன்றபோது மாட்டின் கொம்பு குத்தி காயமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிந்தார். இது குறித்து சிவக்குமாரின் தந்தை தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து விசாரனை செய்த இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், “தனது நண்பனுக்காக டோக்கன் வாங்கி வைத்துள்ளதாகவும், தான் வேடிக்கை மட்டும் பார்க்கத்தான் செல்கிறேன் என்றும் தனது வீட்டில் கூறிவிட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டுள்ளார் சிவக்குமார். எதிர்பாராதவிதமாக மாடு குத்தியதில் அவர் மரணம் அடைந்துள்ளார்” என்று கூறியுள்ளார்.
பள்ளப்பட்டி பழனிச்சாமி-அஞ்சலை தம்பதியினருக்கு சிவக்குமாரே முதன் மகன். மேலும், மெக்கானிக் வேலை செய்து வரும் இவரது வருமானத்தை நம்பியே இவரது குடும்பம் பிழைத்து வந்துள்ளது. தற்போது இவரது இழப்பு அந்தக் குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது. சிவக்குமாருக்கு ஒரு தம்பி மற்றும் தம்பி உள்ளனர். இவர்கள் இருவரும் தங்களது படிப்பை நிறுத்தி விட்டு கூலி வேலையே செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் இறந்த சிவக்குமாரின் உடலைப் பெறுவதற்காக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏராளமானனோர் வந்தனர். அங்கு அவரது குடும்பத்தினர், “நண்பனுக்குத்தானே டோக்கன் வாங்கி வைத்துள்ளேன் என்று எங்களிடம் சொன்ன… நீ ஏன் அதில் கலந்து கொண்டு உயிர விட்ட…” என்று கதறி அழுதது அனைவரின் நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. சிவக்குமாரின் இறப்பு அந்தப் பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.