ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல்!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை  ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல்!
Published on

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. குறிப்பாக, அதிகம் பேர் வசிக்கும் மாஸ்கோவின் Profsoyuznaya தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தில் வசிப்பவர்கள் சிலர் வெளியேற்றப்படுவதாக ரஷ்யாவின் RIA அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இது உக்ரைனின் பயங்கரவாத தாக்குதல் என்று குற்றஞ்சாட்டியுள்ளது. மாஸ்கோவை இலக்காகக் கொண்ட எட்டு உக்ரைனிய ட்ரோன்கள் அனைத்தையும் இடைமறித்ததாகவும் ரஷ்ய தரப்பு கூறியுள்ளது.

இச்சம்பவம் மூலம் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வரும் சூழல் இல்லை என தெரிகிறது. உலகளவில் பேசுபொருளாகிய ரஷ்யா-உக்ரைன் போர், முடிவுக்கு வராத நிலையில், அந்நாட்டு மக்கள் தீவிர பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

தாக்குதலில் எட்டு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. எதிரி ட்ரோன்கள் அனைத்தும் வீழ்த்தப்பட்டன எனவும் மாஸ்கோவில் பல கட்டிடங்களை ட்ரோன்கள் தாக்கியதில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் ரஷ்ய தலைநகரின் மேயர் கூறியுள்ளார்.

மாஸ்கோவின் ஆளுநர் ஆண்ட்ரி வோரோபியோவ் கூறுகையில், நான்குக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மாஸ்கோவை நெருங்கும்போது Pantsir-S மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணை அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்தார். இருப்பினும், ஆளில்லா விமானங்களை யார் ஏவினார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இந்த ட்ரோன் தாக்குதலுக்கு உக்ரைன் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்றாலும், தலைநகர் கீவ் மீதான ரஷ்யாவின் தொடர் ஏவுகணை தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டு ராணுவ உளவுத்துறை தலைவர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுவதை விரைவில் உலகம் பார்க்க வேண்டும், பொருளாதாரத் தடைகள் உட்பட ரஷ்யா மீது உலக நாடுகள் அழுத்தத்தை அதிகரிக்கும்போது பயங்கரவாதிகளின் தனிமை அதிகரிக்கும் அப்போது அவர்கள் அடங்குவார்கள் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com