மருத்துவ மாணவர்களுக்கான ஒன்றிய அரசின் பொது கவுன்சிலிங் முறை ரத்து செய்யப்படவேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

மருத்துவ மாணவர்களுக்கான ஒன்றிய அரசின் பொது கவுன்சிலிங் முறை ரத்து செய்யப்படவேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
Published on

நாட்டில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கான 100% இடங்களுக்கு ஒன்றிய அரசே மாணவர் சேர்க்கை நடத்தும் என்ற அறிவிப்பு ஏற்கக் கூடியது அல்ல இதனை தடுப்பதற்குரிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்கும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ஒன்றிய அரசு அடுத்த ஆண்டு முதல் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, “கடந்த மாதம் பொது கலந்தாய்வு அறிவிக்கப்பட்டவுடன் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் மருத்துவ படிப்புகளுக்கான இளங்கலை எம்பிபிஎஸ் மற்றும் முதுகலை மருத்துவ படிப்புக்கான ஒன்றிய அரசின் பொதுவான கவுன்சிலிங் மாநிலங்களின் பங்கை குறைக்கும் நோக்கம் கொண்டது என்றும் கல்வி உரிமைகளுக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்படி தெரிவிக்கப்பட்ட மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் செயல்முறையை மையப்படுத்தவேண்டிய நீதிமன்ற உத்தரவுகள் எதுவும் இல்லாதபோதும் ஒன்றிய அரசு அறிவித்துள்ள பொது கவுன்சிலிங் என்பது ஏற்றுக்கொள்ளகூடியது அல்ல. இதுகுறித்து உச்ச நீதிமன்றமும் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், மருத்துவ படிப்புக்கான பொது கவுன்சிலிங் முறையை ஒன்றிய அரசு அறிவித்திருப்பது என்பது மாநில உரிமைகளுக்கு குந்தகை விளைவிக்கும் வகையில் இருப்பதால் இதுபோன்ற அறிவிப்புகள் ஏற்ககூடியாத இல்லை என சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் பொது கவுன்சிலிங் முறை இந்த ஆண்டு இருக்காது என ஒன்றிய அரசு சார்பில் வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் பொது கவுன்சிலிங் முறை இருக்கும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுசம்பந்தமான ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். எனவே வரும் 15ம் தேதி கிண்டியில் உள்ள உயர் சிறப்பு மருத்துவமனை திறப்புவிழா முடிந்த பிறகு மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை அடுத்த நாட்களில் சந்தித்து மருத்துவ மாணவர் பொது கவுன்சிலிங் தொடர்பாக பேச உள்ளோம். இந்த சந்திப்பின்போது ஒன்றிய அரசு பொது கவுன்சிலிங் முறையை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்த உள்ளோம். தேவைப்பட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கையிலும் தமிழக அரசு மேற்கொள்ளும்.

மேலும், தமிழ்நாட்டிற்கு தேவையான ஆறு மருத்துவ கல்லூரிகள் மற்றும் 19 செவிலியர் மாணவர்களுக்கான கல்லூரிகள் திறக்கவேண்டும் என வலியுறுத்த உள்ளோம்.இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சென்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் உட்பட உயர் அதிகாரிகள் பேசவுள்ளோம் என தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com