”2021 கியூப வன்முறை, குற்றங்களுக்கு அமெரிக்காவே பொறுப்பு”- கிரான்மா குற்றச்சாட்டு!

”2021 கியூப வன்முறை, குற்றங்களுக்கு அமெரிக்காவே பொறுப்பு”- கிரான்மா குற்றச்சாட்டு!
Published on

கியூபாவில் 2021ஆம் ஆண்டில் நிகழ்ந்த அரசு எதிர்ப்பு வன்முறைகள், குற்றங்களுக்கு அமெரிக்க அரசுதான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கரீபியன் தீவு நாடான கியூபாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற தொடர் அரசெதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பின்னணியாக அமெரிக்க அரசுதான் செயல்பட்டது என கியூப அரசு ஆதரவு நாளிதழான கிரான்மா பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மையமான குழுக்களுக்கு அமெரிக்க அரசுத் தரப்பு நிதியுதவி செய்தது என்றும் கலகக்காரர்கள் சட்டவிரோதமாக நடந்துகொண்டதுடன் வழிப்பறி, தாக்குதல்களிலும் ஈடுபட்டனர் என்றும் குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் சின்னஞ்சிறு நாடான கியூபா மீது நீண்ட காலத் தடையை அமெரிக்கா விலக்கிக்கொள்ள வில்லை என்பதையும் கிரான்மா சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த ஆண்டின் ஜூலை 11, 12 ஆகிய நாள்களில் கியூபாவில் அரசுக்கு எதிராக பெருமளவிலான போராட்டங்கள் நடத்தப்பட்டன்ன. 1959ஆம் ஆண்டில் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் நடைபெற்ற புரட்சிக்குப் பிறகு, அந்த நாட்டில் நடைபெற்ற பெரிய போராட்டமாக அது இருந்ததால், உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. சமூக ஊடகங்கள் மூலம் தவறான பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடவும் வாசிங்டன் துணைசெய்தது என்றும் கிரான்மா சாடியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றை அமெரிக்காவும் இத்தாலி, ஸ்பெயின் முதலான ஐரோப்பிய நாடுகளும் சமாளிக்க முடியாமல் திணறிய நிலையில், கியூபாவின் பெரும் சொத்தாக இருக்கும் மருத்துவத் துறை அந்த நாட்டில் எளிதாக அதை எதிர்கொண்டது. நாட்டு எல்லைகளைத் தாண்டி அமெரிக்காவுக்கும் கியூப மருந்துகள் எடுத்துச்செல்லப்பட்டதும் நடந்தது.

ஆனாலும் அந்த நெருக்கடியிலும் கியூபாவின் பொருளாதாரம் சரிந்துவிட்டது; பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான அரசு பதவிவிலக வேண்டும் என ஐம்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அண்டை நாடான அமெரிக்கா அரை நூற்றாண்டுக்கும் மேல் விதித்துள்ள பொருளாதாரத் தடையால், கியூபா பலவிதங்களில் சராசரியான மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் திணறவும் வேண்டியுள்ளது. அமெரிக்காவை ஒப்பிட உணவுப்பொருட்கள், பொதுப்போக்குவரத்து, எரிபொருள் போன்றவற்றுக்கு கியூபாவில் கடும் சிரமம் நிலவுகிறது.

2021 அக்டோபர் முதல் இதுவரை ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் கியூபாவில் இருந்து தங்கள் நாட்டுக்கு புலம்பெயர்ந்து வந்துள்ளனர் என அமெரிக்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அந்த சூழலில் கியூபாவில் நடந்த அந்தப் போராட்டம் குறுகிய காலமே நீடித்தபோதும், 700க்கும் மேற்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com