ஆபத்தான கொத்துக் குண்டுகளை உக்ரைனுக்கு தரவுள்ளது அமெரிக்கா ராணுவம். ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு படை பல ஆதரவு தந்துவரும் அமெரிக்கா, Cluster bomb என்றழைக்கப்படும் கொத்துக்கொண்டுகளை வழங்க தீர்மானித்துள்ளது.
போர் என்றாலே அபாயம் என்றாலும், அதற்கென சரவ்தேச ரீதியிலான பல சட்டங்கள், விதிமுறைகள் உள்ளன. அதை மீறும் நாடுகள் அல்லது கிளர்ச்சிக் குழுக்கள் மீது போர்க்குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அளிக்க முடியும். இதன்படி 120 நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்தும் Cluster bomb என்றழைக்கப்படும்கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்த உக்ரைன் முடிவுசெய்துள்ளது.
கடந்த பிப்ரவரியில் ரஷ்யா தொடுத்த போர்த் தாக்குதலால், உக்ரைனும் பதில் தாக்குதலை ஆரம்பித்தது. உக்ரைனின் பல பகுதிகள் போரால் நாசமடைந்து, ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரு தரப்பிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினரும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் குறிப்பாக அமெரிக்கா உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை பகிரங்கமாக அளித்துவருகிறது. இதுவரை 41 முறை அமெரிக்கத் தரப்பிலிருந்து உக்ரைனுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள், தாக்குதல் வாகனங்கள் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. அடுத்ததாக, 42ஆவது முறையாக உக்ரைனுக்கு ஆயுதப் பொருட்கள் அனுப்பப்பட உள்ளன.
சுமார் 80 கோடி டாலர் மதிப்பிலான இந்த ஆயுதங்கள் பட்டியலில், ஹிமார்ஸ் எனப்படும் அதிக தொலைவு சென்றுதாக்கும் எறிகணை கருவிகள், தரை வாகனங்கள், டாங்கிகள், ஏவுகணைகள் பொருத்தப்பட்ட சுமைவண்டிகள் ஆகியவை இடம்பெறும் என்று அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் இடம்பெற்றுள்ள கொத்துக்குண்டுகள் என்பவை, வானிலிருந்து வீசப்பட்டவுடன் வெடித்துச் சிதறுவதுடன், சிதறும் ஒவ்வொரு துணுக்கும் வெடித்து அந்தச் சுற்று வட்டாரத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இந்த அபாயம் கொண்டதால்தான் உலக நாடுகளில் பெரும்பாலானவை இதைத் தடைசெய்துள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டில் இதற்கான ஐநா உடன்படிக்கையில் 12-க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன. ஆனால், உக்ரைன், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இதுவரை அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. ஆனாலும், அமெரிக்காவின் 2009ஆம் ஆண்டு சட்டம் ஒன்று கொத்துக்கொண்டு வகை ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கிறது.
அதையும் மீறி, கடந்த ஒரு மாதமாக உக்ரைனுக்கு இந்த ஆயுதங்களைத் தருவது குறித்து அமெரிக்க இராணுவம் பேசிவருகிறது. நடப்பு சூழலில் உக்ரைனுக்கு இந்த ஆயுதங்கள் அவசியமானவை என அமெரிக்க இராணுவ அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனிடையே, உக்ரைன், ரஷ்யா இரு தரப்புகளுமே கொத்துக்குண்டு வகை ஆயுதங்களைப் பயன்படுத்தி இருப்பதாக மனிதவுரிமைக் கண்காணிப்பு எனும் சர்வதேச அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.