50 ஆண்டுகளுக்கு மேலாகியும் தனது பள்ளி ஆசிரியரை மறக்காது சந்தித்த துணை ஜனாதிபதி!

50 ஆண்டுகளுக்கு மேலாகியும் தனது பள்ளி ஆசிரியரை மறக்காது சந்தித்த துணை ஜனாதிபதி!
JAGRAN PRAKASHAN LIMITED

கேரள மாநில சட்டமன்றக் கட்டடத்தின் 25வது ஆண்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நேற்று கேரள மாநிலம் வந்தார். அப்போது பள்ளியில் தனக்கு ஆசிரியராக இருந்த ரத்னா நாயரின் வீடு தேடிச் சென்று அவரது காலைத் தொட்டு வணங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

ராஜஸ்தான் மாநிலம், சித்தோர்கிரா சைனிக் ஸ்கூலில் தனது இளமைக் கால பள்ளிப் படிப்பைப் படித்தார் ஜக்தீப் தன்கர். அந்தப் பள்ளியில் தனக்கு ஆசிரியராக இருந்தார் ரத்னா நாயர். இந்த நிலையில், 55 ஆண்டுகள் கழித்து அரசுமுறைப் பயணமாக கேரளா வந்த துணை ஜனாதிபதி, கண்ணூர் மாவட்டம், பானூரில் வசிக்கும் தனது ஆசிரியர் ரத்னா நாயரை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றார். தனது மனைவி டாக்டர் சுதேஷ் தன்கருடன், ஆசிரியரின் வீட்டுக்குச் சென்ற துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், காரில் இருந்து இறங்கியதும் ஆசிரியர் ரத்னா நாயரின் காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றார். ஜனாதிபதியின் துணைவியாரும் ரத்னா நாயரின் காலை தொட்டு வணங்கினார். பின்னர் டீ அருந்தியபடி 45 நிமிடங்கள் தனது ஆசிரியரிடம் உரையாடிக் கொண்டிருந்தார். அதன் பிறகு ஆசிரியர் ரத்னா நாயரை இருக்கையில் அமர வைத்து, அவருக்குப் பின்னால் நின்றபடி துணை ஜனாதிபதியும், அவரின் துணைவியாரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பிறகு ஆசிரியரின் வீட்டில் இருந்து புறப்படும்போதும் அவரது காலைத் தொட்டு வணங்கிவிட்டு விடைபெற்றார் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்.

இது குறித்து ஆசிரியர் ரத்னா நாயர் கூறுகையில், "இது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய குருதட்சணை. 1968ல் ஜக்தீப் தன்கர் பள்ளிப் படிப்பை முடித்துச் சென்றார். அதன் பிறகு இன்றுதான் அவரைக் கண்டேன். மேற்கு வங்க கவர்னராக அவர் பதவி ஏற்றபோதும், துணை ஜனாதிபதியாக பதவி ஏற்ற சமயத்திலும் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், உடல்நலப் பிரச்னையால் என்னால் போக இயலவில்லை. ஆனாலும், 'டீச்சரை சந்திக்க நான் வருவேன்' என துணை ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அவர் தற்போது பணி நிமித்தமாக கேரளாவுக்கு வந்த நேரத்தில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்" என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார் 83 வயதான ஆசிரியை ரத்னா நாயர்.

இந்த சந்திப்பின்போது, கேரள சட்டசபை சபாநாயகர் ஏ.எம்.ஷம்ஸீர் உடன் இருந்தார். ஆசிரியர் ரத்னா நாயரின் சகோதரரின் பேரக் குழந்தைகளுக்கு துணை ஜனாதிபதி பரிசுகளை வழங்கினார். பின்னர் அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com