ஓசூர் வனப் பகுதியில் தஞ்சமடைந்துள்ள காட்டு யானைகள்...
கர்நாடக மாநிலம் காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து ஆண்டு தோறும் நவம்பர் மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட மாநில எல்லையான ஜவலகிரி வனப்பகுதி வழியாக தமிழகத்தில் நுழைவது வழக்கம்.
கர்நாடகாவில் இருந்து ஓசூர் வனக் கோட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தளி, ஜவளகிரி, நொகனூர், தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்க்கம், சானமாவு, குருபரப்பள்ளி, மகாராஜகடை, வேப்பனப்பள்ளி ஆகிய வனப் பகுதிகளில் தஞ்சமடையும். அதன் பிறகு ஆந்திர மாநிலம் சென்று பிறகு மீண்டும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்குச் சென்றுவிடும்.
இந்த இடைப்பட்ட காலத்தில் வனப் பகுதியில் தஞ்சம் அடைந்து இரவு நேரங்களில் உணவு, தண்ணீர் தேடி அருகிலுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து அங்கு விவசாயிகள் சாகுபடி செய்துள்ள ராகி, தாக்களி, கோஸ், பீன்ஸ், அவரை, வாழை உள்ளிட்ட பயிர்களை தின்றும், சேதப்படுத்தியும் வருகிறது.
மேலும் அங்குள்ள நீர் நிலைகளில் ஆனந்த குளியலிட்டு வருகிறது. அப்போது அங்கு மனிதர்களை தாக்கி வருவதும் தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டும் கடந்த அக்டோபர் மாதம் கர்நாடக மாநிலம் காவேரி வனவிலங்கு சரணாலயத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஓசூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட ஓசூர் சானமாவு, ஊடேதுர்கம், நுகனூர், தேன்கனிக்கோட்டை, உரிக்கும் உள்ளிட்ட வன பகுதிகளில் பல குழுக்களாக பிரிந்து தஞ்சம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது ஊடேதுர்க்கம் வனப் பகுதியில் சுமார் 50 யானைகள், சாணமாவு வனப்பகுதியில் மூன்று யானைகள், நுகனூர், தேன்கனிக்கோட்டை, அய்யூர் ஆகிய வனப்பகுதியில் 35 யானைகள், தளி, ஜவலகிரி, உளிபண்டா ஆகிய பகுதிகள் 65 யானைகள், வேப்பணப்பள்ளி பகுதியில் எட்டு யானைகள், அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு ஆகிய பகுதிகளில் 35 யானைகள், உரிகம், தக்கட்டி, மல்லாஹள்ளி ஆகிய பகுதிகளில் 25 யானைகள் தஞ்சம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இந்த யானை கூட்டங்களை, வனப் பணியாளர்கள், மற்றும் அதிவிரைவு மீட்பு குழுவினர் கண்காணித்து வருகிறார்கள், மேலும் கிராம பகுதிகளில் நுழையும் யானைகளை விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து வன ஊழியர்கள் ஒலி பெருக்கிகள் மூலம் கிராம மக்களுக்கு “விவசாய நிலங்களுக்கு இரவு காவலுக்கு செல்ல வேண்டாம். விறகு சேகரிக்கவும், கால்நடைகளை மேய்க்கவும் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம்” என வனத் துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.