கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கொயிலாண்டி பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி. ஆறாம் வகுப்பு படித்து வந்த இவரது மகன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டின் ஃப்ரிட்ஜில் வைத்திருந்த ஐஸ்கிரீமை எடுத்து சாப்பிட்டார். இதனால் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அச்சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சிறுவனுடைய உடல் உடற்கூறாய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது. உடற்கூறாய்வு முடிவில் சிறுவன் சாப்பிட்ட ஐஸ்கிரீமில் அமோனியம் சல்பேட் என்ற ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு ஐஸ்கிரீம் எங்கு வாங்கப்பட்டது என விசாரித்தபோது, ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்தது முகமது அலியின் சகோதரியான தாஹிரா என்பது தெரியவந்தது. பின்னர் அவரைப் பிடித்து விசாரித்தபோது, ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்ததால் தான் சிறுவன் உயிரிழந்திருக் கிறான் என்ற உண்மை வெளிவந்தது.
அண்ணன் முகமது அலியின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் தாஹிராவுக்கும் முகமது அலியின் குடும்பத்தி னருக்கும் நீண்ட நாட்களாக குடும்பத்தகராறு இருந்துள்ளது. தகராறின்போது தாஹிராவை பைத்தியம் என்று அவருடைய அண்ணன் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த தாஹிரா, அண்ணன் குடும்பத்தின் கதையை மொத்தமாக முடிக்க திட்டமிட்டு, ஃபேமிலி ஐஸ்கிரீம் பேக் ஒன்றை வாங்கி அதில் எலிகளைக் கொல்லும் விஷப் பேஸ்டை கலந்துள்ளார்.
பின்னர் அந்த விஷ ஐஸ்கிரீமை முகமது அலியின் மகனிடம் கொடுத்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அதைவாங்கி சாப்பிட்டதால்தான் அச்சிறுவன் பலியாகியுள்ளான் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐஸ்கிரீமில் கலக்கப்பட்ட எலி பேஸ்டில் அமோனியம் சல்பர் என்னும் ரசாயனம் இருந்ததால், அது விரைவாக ரத்தத்தில் கலந்து சிறுவன் இறக்கக் காரணமாக அமைந்துள்ளது.
மேலும் தாஹிராவிடம் விசாரணை நடத்தப்பட்டபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். அவர் ஐஸ்கிரீம் வாங்கிய கடை, பேஸ்ட் வாங்கிய கடைகளுக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலனை கொலை செய்ய குளிர்பானத்தில் விஷம் கலந்த காதலி போல அண்ணன் குடும்பத்தை கொலை செய்ய ஐஸ்கிரீமில் பெண் விஷம் கலந்த சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.