நாயை காப்பாற்ற ஐஸ் கட்டி ஏரியில் குதித்த இளைஞர்!

நாயை காப்பாற்ற ஐஸ் கட்டி ஏரியில் குதித்த இளைஞர்!
Updated on

பாதி உறைந்த நிலையில் உள்ள ஏரியில் குதித்து, உயிரைப் பணயம் வைத்து நீரில் மூழ்கும் நாயை ஒருவர் காப்பாற்றும் விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. அமெரிக்காவில், கொலராடோவில் உள்ளது ஸ்லோன் ஏரி. இந்த ஏரியின் தண்ணீர் பாதி உறைந்த நிலையில் இருக்கும். இந்த ஏரியில் உறைந்து கிடக்கும் நீரிலிருந்து வெளியே வரமுடியாமல் தவித்த லோகி என்ற நாயை மீட்க ஒருவர் துணிச்சலுடன் குதித்துள்ளார்,

ஹோலி மோர்பியு என்பவர் இன்ஸாடகிராமில் இந்த விடியோவை பகிர்ந்துகொண்டுள்ளார். வாத்துக்களை துரத்திச் சென்றபோது நாய், ஏரியில் விழுந்து விட்டது. ஆனால், தன்னுடைய பாதுகாப்பை பற்றி சிந்திக்காமல் ஜாஸன் ஸ்கிட்ஜெல் என்பவர் உடனடியாக நாயை காப்பாற்றும் நோக்கில் தனது ஆடைகளை களைந்துவிட்டு உறைநீரில் குதித்துவிட்டார்.

ஹோலி மோர்பியூ என்ற பெண்மணி இதுபற்றி விளக்கிக் கூறுகையில், “ நேற்று நானும் எனது நண்பரும் ஸ்லோன் ஏரியைச் சுற்றி நடந்து சென்றோம். எதிர்திசையில் , வாத்துக்களை வேகமாக துரத்திக் கொண்டு வந்த நாய், ஏரிக்குள் தவறி விழுந்துவிட்டது. பாதி உறைந்த நிலையில் இருந்த ஏரியில் விழுந்த நாய், உயிருக்கு போராடிய நிலையில் வெளியில் வர முயன்றது. ஆனால், நீண்ட நேரம் ஆகியும் எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் நாங்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தோம். அவர்கள் உடனடியாக வந்து நாயை காப்பாற்றுவர்களா என்பதும் தெரியவில்லை. இந்த நிலையில் அந்த வழியாக வந்த ஒருவர், திடீரென சட்டையை கழற்றிவிட்டு உறைநீரில் குதித்து உயிரை துச்சமென மதித்து நாயை காப்பாற்றியதுடன், அவரும் பாதுகாப்பாக வெளியே வந்தார். அந்த ஹீரோவின் தீரச்செயல் எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது” என்று தெரிவித்துள்ளார்.

உறை நீரில் குதித்து அந்த நபர், அந்த நாயை பிடித்துக் கொண்டார். பின்னர் நாய் மெல்ல மெல்ல நீந்தி கரைக்கு வர உதவினார்.

இந்த சம்பவத்தை நேரில் வேடிக்கை பார்த்த பலரும் அந்த நபரை பாராட்டினர். அவருக்கு புதிய ஆடைகளையும், ஜாக்கெட்டுகளையும் கொடுத்து உதவினர். பின்னர் ஸ்கிட்ஜெல், தனக்கு உதவியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

“மனிதநேயம் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டோம். நான் லோகியை காப்பாற்றி இருக்கலாம். ஆனால், இங்கிருந்த சிலர் என்னை காப்பாற்றினார்கள்” அனைவருக்கு நன்றி என்று ஸ்கிட்ஜெல் கூறியுள்ளார்.

நாயை காப்பாற்றிய நீங்கள் ஒரு ஹீரோதான். இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த பலரும் பலவித்த்தில் உங்களுக்கு உதவியுள்ளனர். அதை காண்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்று ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

நாய் உங்களுடையது இல்லை என்ற போதிலும் மனித நேயத்துடனும் துணிச்சலுடனும் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய உங்களுக்கு எங்கள் பாராட்டு. அனைவரும் மனதில் கொள்ள வேண்டிய மனிதநேயமாகும் இது என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

நாய், உறையும் நீரில் சிக்கி தவிப்பதையும், அதை நீங்கள் காப்பற்ற முயன்ற காட்சியையும் பார்த்து நான் அழுதுவிட்டேன். இந்த உலகில் மனிதநேயம் இன்னும் இருக்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும் என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்

logo
Kalki Online
kalkionline.com