ஆன்லைன் வியாபாரத்தில் ஐம்பது கோடியை அபேஸ் செய்த இளைஞர்!

ஆன்லைன் வியாபாரத்தில் ஐம்பது கோடியை அபேஸ் செய்த இளைஞர்!
Published on

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகன் நாகராஜ். இவருக்கு வயது35. பட்டதாரி வாலிபரான இவருக்கு சத்யா என்ற மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வந்த இவர், பல லட்சம் ரூபாய் கையாடல் செய்து அந்த வங்கியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் ஆன்லைன் வியாபாரம் ஒன்றை நடத்தி வந்தார்.

அதன் மூலம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ளவர்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி பல கோடி ரூபாயை வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. தொடக்கத்தில் சில பேருக்கு சொன்னபடியே பணத்தையும் கொடுத்துள்ளார். இதனால் தமிழ்நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் இவரிடம் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் முதலீடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 1ம் தேதி முதல் முதலீடு செய்த யாருக்கும் பணம் கொடுக்காததால் இவர் மீது சந்தேகம் அடைந்த பலரும் அவரைத் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பலர் அவரது வீட்டுக்கே நேரடியாக வந்துள்ளனர். அங்கு வந்து பார்த்தபோது, அவரது வீடு பூட்டப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அதன் பிறகுதான் அவர் தங்களை ஏமாற்றி உள்ளதை அவர்கள் அறிந்துள்ளனர். அதைத் தொடர்ந்து சிலர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இன்னும் சிலர் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திலும் புகார் செய்தனர்.

இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம், பெங்களூர், திருச்சி, ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்டோர் அவரது வீட்டுக்கு முன்பு குவிந்தனர். இதனால் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர் பொதுமக்களிடம் ஏமாற்றிய பணம் மட்டும் சுமார் ஐம்பது முதல் நூறு கோடி ரூபாய் வரை இருக்கும் என அவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் உடனடியாக அவர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டுத் தரும்படியும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com