தியேட்டர்களுக்கு அதிகாரம் உண்டு, கோர்ட் தலையிட முடியாது!

தியேட்டர்களுக்கு அதிகாரம் உண்டு, கோர்ட் தலையிட முடியாது!
Published on

தியேட்டர்களுக்கு படம் பார்க்க செல்பவர்களுக்கு படம் பார்க்க வாங்கும் டிக்கெட் விலையை விட, தியேட்டர் ஸ்டால்களில் விற்கும் உணவு பொருட்களை வாங்கும் செலவு அதிகமாக உள்ளது.

வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர், குளிர் பானங்கள் ஆகியவற்றை தியேட்டர் நிர்வாகம் அனுமதிப்பது இல்லை. இதுகுறித்து பொது மக்கள் ஏற்கெனவே பலமுறை பொது வெளியில் ஒரு புகாராக கூறிவந்தனர்.

இது தொடர்பாக பொதுநல வழக்காக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வழக்கறிஞர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

 மனுவை விசாரித்த நீதிபதிகள், “மல்டிபிளக்ஸ் மற்றும் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவோர் வெளியில் இருந்து உணவு மற்றும் குளிர் பானங்களை எடுத்து வந்தால் அதற்கு தியேட்டர் நிர்வாகம் தடை விதிக்கக்கூடாது” என ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்து இருந்தது.

 இதை எதிர்த்து தியேட்டர் உரிமையாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கானது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் மற்றும் நீதிபதி டி.எஸ்.நரசிம்மா அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

குறிப்பாக மனுதாரர் தரப்பில் வழக்கை பொறுத்தவரைக்கும் திரையரங்கில் குடிநீரை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் உணவுகள் கொண்டு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்கு காரணமாக “தியேட்டரின் பாதுகாப்பு” என்று சொல்லப்படுவதாகவும், மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சினிமா திரையரங்கு என்பது தனி நபருக்கு சொந்தமான இடம். அந்த இடத்தில் என்ன மாதிரியான விதிமுறைகளை வகுக்க வேண்டும் ? என்பதை சட்டதிட்டங்களுக்குட்பட்டு தியேட்டர் நிர்வாகம்தான் முடிவெடுக்கும். அதில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தனிநபர் சொத்து சார்ந்த இடத்தில் அவர்கள் பிறப்பிக்கும் உத்தரவுக்கு பொதுமக்கள் கட்டுப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இறுதியாக, வெளியில் இருந்து உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட பானங்களை கொண்டு செல்வதற்கு தடை விதிப்பதற்கு திரையரங்குகளுக்கு உரிமை இருப்பதாக தீர்ப்பில் தெரிவித்தார்கள்.

எந்த தியேட்டருக்கு செல்ல வேண்டும் எந்த படம் பார்க்க வேண்டும் என்பதை பார்வையாளர்களே முடிவு செய்கின்றனர். தியேட்டர்களில் உணவு பொருட்கள் வாங்கும்படி யாரும் கட்டாயப்படுத்துவதில்லை. எனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

அதே நேரத்தில் இலவசமாக குடிநீர் திரையரங்கில் வழங்க வேண்டும் வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு பெற்றோர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றமானது உத்தரவிட்டிருக்கிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com