சென்னை, கொரட்டூர் அழகுநிலையத்தில் கத்தி முனையில் துணிகரக் கொள்ளை!

சென்னை, கொரட்டூர் அழகுநிலையத்தில் கத்தி முனையில் துணிகரக் கொள்ளை!
Updated on

(தமிழ்நாடு)

சென்னை கொரட்டூரில் அமைந்திருக்கும் அழகு நிலையம் ஒன்றில் துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று இன்று அரங்கேறி இருக்கிறது. பட்டப்பகலில் முகமூடி அணிந்த மர்ம இளைஞர்கள் நான்கு பேர் அழகு நிலையத்தினுள் நுழைந்து அங்கிருந்த ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி அழகுநிலையத்தில் இருந்த டிவி, மடிக்கணினி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை திருடிச் சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகி தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகிக் கொண்டிருக்கிறது.

மர்ம நபர்கள் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட பொதுவாக இரவு நேரங்களைத் தேர்ந்தெடுப்பதே வாடிக்கையான நிகழ்வு. ஆனால், பட்டப்பகலில் மனித நடமாட்டம் மிகுந்திருக்கும் வேலையில் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என சகல தரப்பினரும் வந்து செல்லும் இடமான அழகுநிலையத்தில் இப்படி ஒரு துணிகரக் கொள்ளைச் சம்பவம் அரங்கேறி இருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அழகுநிலையத்தில் இருந்தவர்களை கத்தி முனையில் மிரட்டி அங்கிருந்த ஒரு அறைக்குள் தள்ளிப் பூட்டி விட்டு அழகுநிலையத்தில் இருந்த பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவான நிலையில் அங்கிருந்து மீண்டவர்கள் அதை ஆதாரமாகக் கொண்டு கொள்ளைச் சம்பவம் குறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் தேடுதல் வேட்டை நிகழ்த்திய போது தலைமறைவான நான்கு மர்ப நபர்களும் திருவள்ள்ளூர் அருகே வேப்பம்பட்டு கிராமத்தில் பதுங்கி இருப்பதாகத் தகவல் வரவே அங்கு விரைந்த காவல்துறையினர் அந்த நான்கு இளைஞர்களையும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்தனர்.

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் போது அவர்கள் சிராஜூதீன், வெள்ளை விஜய், அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி மற்றும் பூபாலன் எனத் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணையத் தொடங்கிய காவல்துறையினர், இவர்கள் இங்கு மட்டுமின்றி சென்னையில் வேறு எந்தெந்த பகுதிகளில் இவ்விதமாக கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறாரகளா என்பது குறித்து தீவிரமாக கேள்விகளை எழுப்பியுள்ளனர். அழகுநிலையத்தில் திருடப்பட்ட பொருட்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல். அவை உரிய விசாரணைக்குப் பின் உடைமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற இடம் ஆவடி காவல் சரக எல்லைக்கு உட்பட்டது என்பதால் அங்குள்ள காவல்துறையினர் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு இது போன்ற குற்றச் சம்பவங்கள் அந்தப் பகுதியில் இன்னும் வேறு எங்கேனும் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட நால்வரது குற்றப்பின்ணனி குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com