அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க போதுமான நிதியில்லை!! - கஜானா காலி!

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க போதுமான நிதியில்லை!!  - கஜானா காலி!

இலங்கையின் பொருளாதார சிக்கல் இன்னும் தீர்ந்தபாடில்லை. கடும் பொருளாதார நெருக்கடியில் கடந்த ஓராண்டாகவே சிக்கித் தவித்து வருகிறது. விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு, பணவீக்கம் உள்ளிட்டவை இலங்கைப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீள முடியாத நிலை நீடிக்கிறது.

இலங்கையை கடன்களிலிருந்து காப்பாற்ற, 500 கோடி டாலர் வரை தேவைப்படுகிறது. இந்தியா ஏற்கனவே சில உதவிகளை செய்திருக்கிறது. இனிமேல் உலக வங்கிதான் உதவியாக வேண்டும். இந்நிலையில் உள்நாட்டில் பணம் அச்சிடுவதை நிறுத்தி வைக்குமாறு சர்வதேச நிதி அமைப்புகள் இலங்கையை கேட்டுக் கொண்டிருக்கின்றன.

75 ஆண்டுகளாக உள்நாட்டில் தொடர்ந்து பணத்தை அச்சடித்து, வெளியிலிருந்து கடன் வாங்கி வருவதால்தான் இலங்கையால் கடன்களை அடைக்க முடியவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு அதுவே முக்கியக் காரணம் என்கிறார்கள், பொருளாதார வல்லுநர்கள்.

இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்க, அரசிடம் போதுமான நிதி இல்லையென்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு அரசு ஊழியர்களுக்கான சம்பள பணத்தை திரட்டுவதில் சிக்கல் இருப்பதாக இலங்கை அமைச்சரும் ஒப்புக் கொண்டுள்ளார்.

நிதி ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது. அடுத்த மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படுவது குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் தாமதமாகும் என்று தெரிகிறது. இந்நிலையில்லை இலங்கை அரசு சிக்கன நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளது.

ஒவ்வொரு அமைச்சகமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து 5 சதவீத நிதியை குறைத்து வரவு செலவுத் திட்டத்தை மாற்றியமைக்கும்படி சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அட, இனிமேல்தான் இதை செய்யப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்புகிறார்கள், இணைய வாசிகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com