மதரஸாக்களை மூடிவிட்டால் “லவ் ஜிஹாத்” இருக்காது: பெண் துறவியின் சர்ச்சை பேச்சு!

மதரஸாக்களை மூடிவிட்டால் “லவ் ஜிஹாத்” இருக்காது: பெண் துறவியின் சர்ச்சை பேச்சு!
Updated on

“லவ் ஜிஹாத்” உருவாக காரணமாக இருக்கும் மதரஸாக்களை மூட வேண்டும் என்று கூறி வி.ஹெச்.பி. தலைவரும் பெண் துறவியுமான சாத்வி பிராச்சி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

வலதுசாரி ஆதரவாளரான சாத்வி பிராசி, ஹிந்து பெண்கள் கைப்பையில் லிப்ஸ்டிக், சீப்புக்கு பதிலாக கத்தி வைத்துக் கொள்ள வேண்டும். ஹிந்து பெண்கள் கைப்பையில் கத்தி வைத்திருப்பது தெரிந்தால் ஜிஹாதிகள் சற்று தள்ளியே இருப்பார்கள் என்று பேசி ஏற்கெனவே சர்ச்சையை ஏற்படுத்தியவர்.

இந்தியாவில் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொண்டவர்கள் வாக்களிக்க தடைவிதிக்க வேண்டும் என பேசி சர்ச்சையை ஏற்படுத்தியவர். இப்படி சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசுவதே அவரது வழக்கமாகும்.

இந்தியாவை ஹிந்து ராஷ்டிரம் என்று அறிவிக்க வேண்டும் என்ற தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரியின் கோரிக்கையை தீவிரமாக ஆதரிப்பவர்.

சாத்வி பிராச்சி என அழைக்கப்படும் பிராச்சி ஆர்யா, உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுவாமி பரமானந்த கிரிஜி மஹராஜின் சீடர். ஹரித்வாரில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்த அவர், பல நகரங்களுக்கும் சென்று ஆன்மிகத்தையும் ஹிந்துதர்மத்தையும் பரப்பி வந்தார். வேதங்கள், உபடநிடதங்களை கற்ற அவர், ஆர்.எஸ்.எஸ்.ஸின் பெண்கள் அமைப்பான ராஷ்ட்ரீய சேவிகா சமிதியின் உறுப்பினர். விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பில் சேர்ந்து பணியாற்றி முக்கிய தலைவர்களில் ஒருவரானார்.

2016 ஆம் ஆண்டில் ஜாகிர் நாயக்கின் தலையை கொண்டுவருபவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். வன்முறையைத் தூண்டியதாக அவர் மீது வழக்கும் உள்ளது.

இந்த நிலையில் லவ் ஜிஹாத்துக்கு காரணமாக இருக்கும் மதரஸாக்களை மூட வேண்டும் என்று கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

மதரஸாக்கள் மூடப்பட்டால் லவ் ஜிஹாத் காணாமல் போய்விடும். நாட்டில் அமைதியும் நல்லிணக்கமும் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். (முஸ்லிம் ஆடவர்கள், ஹிந்து பெண்களை மயக்கி, மதமாற்றம் செய்து திருமணம் செய்வதற்கு பெயர்தான் “லவ் ஜிஹாத்” என்று பா.ஜ.க.வும் வலதுசாரி ஆதரவாளர்களும் கூறிவருகின்றனர். ஆனால் இந்திய அரசு அந்த வாதத்தை அங்கீகரிக்கவில்லை. இது தொடர்பாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கவில்லை.

மீண்டும் முதல்வர் ஆகலாம் என்ற சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் கனவு பலிக்காது. மீண்டும் நரேந்திர மோடிதான் பிரதமராக வருவார். மக்கள் அவருக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றும் சாத்வி பிராச்சி கூறினார்.

logo
Kalki Online
kalkionline.com