மனித வளம் உள்ள இடத்தில்தான் முதலீடு செய்ய வருவார்கள் - ஆளுநர் பேச்சுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்!

மனித வளம் உள்ள இடத்தில்தான் முதலீடு செய்ய வருவார்கள் - ஆளுநர் பேச்சுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்!

ஆளுநரின் சமீபத்திய பேச்சில் முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை விமர்சித்தது தமிழக அரசியலில் புயலை கிளப்பியிருக்கிறது. அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் வைகோ, கே.எஸ். அழகிரி உள்ளிட்ட தி.மு.கவின் கூட்டணிக்கட்சியினரும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள்.

பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக ஆளுநர் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். அவருடைய எல்லை மீறிய பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தாலும் அவற்றையெல்லாம் மதிப்பதில்லை. அந்நிய மூலதனம் நேரடியாக போய் கேட்பதால் வராது என்ற ஒரு கருத்தை வெளியிட்டு தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை விமர்சனம் செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் சென்று தமிழகத்தின் வளர்ச்சிக்காக அந்நிய மூலதனங்களை ஈர்த்து வந்திருப்பதை குறை கூறி இருக்கிறார். தமிழகத்தில் கல்வி சரியில்லை. உள்கட்டமைப்புகள் சரியில்லை. அந்நிய முதலீடுகள் வராது என்றெல்லாம் பேசியிருக்கிறார். உத்தரப்பிரதேசத்திற்கு செல்லாத முதலீடுகள் ஏன் தமிழகத்திற்கு வருகிறது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். எங்கே மனித வளம் அதிகமாக இருக்கிறதோ அங்கே தான் முதலீடு செய்ய முன்வருவார்கள். மனித வளம் நிறைந்த தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்கும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

மோடி பிரதமரான பின்னர்தான் நாட்டில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். உண்மையில் நரசிம்மராவ், மன்மோகன் சிங், ப. சிதம்பரம் ஆகியோர் பொறுப்பில் இருந்தபோதுதான் நாட்டின் தொழில் வளர்ச்சி உச்சத்தில் இருந்தது. தற்போது 9 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைந்து இருக்கிறது. பொருளாதார சூழல் மோசமான நிலையில் இருக்கிறது.

மோடி அரசு வளர்ச்சிப் பாதையில் இருந்து விலகிவிட்டது. தற்போது மதவாத அரசியலை மட்டுமே நம்பி இருக்கிறது. மணிப்பூரில் ஒரு இன அழிப்பையே பா.ஜ.க அரசு மேற்கொள்வதை பார்க்க முடியும். அங்கு பழங்குடியின மக்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால் அங்கே மோதலை ஏற்படுத்தி வருகிறார்கள் என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

ஆளுநரின் பேச்சு சர்ச்சையாகும்போது ஆளுநரின் மோதல் போக்கை கண்டித்து தி.மு.க கூட்டணிக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதுண்டு. இம்முறை ஆளுநரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி என்ன செய்யப்போகிறது என்பதே அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com