தயாராகிறது மூன்றாவது அணி: தி.மு.க கூட்டணிக்கட்சிகள் என்ன செய்யப் போகின்றன?

தயாராகிறது மூன்றாவது அணி: தி.மு.க கூட்டணிக்கட்சிகள் என்ன செய்யப் போகின்றன?

தெலுங்கானாவின் டி.ஆர்.எஸ் கட்சிக்கு பிரமோஷன் கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க என்னும் மாநிலக் கட்சி திடீரென்று தேசியக் கட்சியாக உருவெடுத்தது போல் டி.ஆர்.எஸ் கட்சியும் தேசியக் கட்சியாக மாறியிருக்கிறது.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி. தெலுங்கானா மாநிலம் உருவான நாள் முதல் அசைக்க முடியாத ஒரே அரசியல் சக்தியாக இருந்து வருகிறது. காங்கிரஸ், பா.ஜ.க மட்டுமல்ல, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளால் கூட டி.ஆர்.எஸ் கட்சியின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தமுடியவில்லை.

தெலுங்கானாவின் முதல்வர் சந்திரசேகர ராவ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை 'பாரத ராஷ்டிரிய சமிதி' என்று பெயர் மாற்றம் செய்வதாக நேற்று அறிவித்தார். கட்சியின் பெயரில் 'பாரதம்' என்று சேர்த்த காரணத்தால் மாநிலக் கட்சியானது, தேசியக் கட்சியாக உருவாகிவிட்டது.

பாரத ராஷ்டிரிய சமிதி, தேசியக்கட்சியாக பல்வேறு மாநிலங்களில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் முதல் கூட்டம் தெலுங்கானாவின் கம்மம் பகுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலக் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டார்கள். 'இன்னொரு தேசிய முன்னணி உருவாக வாய்ப்பிருக்கிறதோ' என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். சந்திரசேகர ராவ் அரசை தொடர்ந்து ஆதரிக்கும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி, கர்நாடகாவில் யாத்திரையில் இருப்பதால் பங்கேற்கவில்லை.

சந்திரசேகர ராவ் முன்னெடுப்பில் 'காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் கூட்டணி உருவாகுமா' என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியோடு கைகோர்க்க தயங்கும் இடது சாரிகள், டி.ஆர்.எஸ் கட்சியோடு கைகுலுக்குவதில் எந்த சங்கடமுமில்லை. பா.ஜ.க, காங்கிரஸ் என இருபெரும் கட்சிகளோடு நெருங்காமல் விலகி நிற்கும் ஆம் ஆத்மி கட்சியும் டி.ஆர்.எஸ் கட்சியோடு இணைந்து செயல்பட தயாராக இருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவது உள்நோக்கம் கொண்டது என்கிறார்கள். சந்திரசேகர ராவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிகளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வளர்ந்தவை. ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் இவர்களில் யாரும் கைகோர்க்கவில்லை.

இடதுசாரிகள் இடம்பெறுவதால் சந்திரசேகர ராவுக்கு மம்தா பானர்ஜியின் ஆதரவு கிடைக்க வாய்ப்பு இல்லை. ஸ்டாலின்? அதை தி.மு.க தெளிவுபடுத்திவிடும். தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் நிலை? யாருக்குத் தெரியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com