திருக்கடவூர் மயானம் பாம்பாட்டி சித்தர் பீடம்

திருக்கடவூர் மயானம்
பாம்பாட்டி சித்தர் பீடம்

பௌர்ணமி அன்று சித்தர்கள் ஜீவசமாதிக்கு சென்று வழிபாடு  செய்தால் நமக்கு தேவையான சக்தி, ஆற்றல் கிடைக்கும். சித்தர்கள் ஜீவசமாதி அடைந்தாலும் அந்த இடத்தில் சூட்சும ரூபமாக இருந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். சித்தர்களில்  குறிப்பிடத் தக்கவர்கள் 18 பேர்.  அதில் ஒருவர்தான் பாம்பாட்டி சித்தர். பாம்பு பிடிக்கும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த இவர்  சட்டை முனி சித்தர் உபதேசத்தால் குண்டலினி யோகம்  கற்று ஞான நிலையை அடைந்தார். 'ஆடு பாம்பே' என்று  விளித்து பல தத்துவப் பாடல்களை பாடினார்.

"நாதர் முடி மேலிருக்கும் நாகப் பாம்பே  நச்சுப் பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே..."  என்று தொடங்கும் இவரின் பாடல் சித்தர் பாடல்களில்  புகழ் பெற்று விளங்குகிறது. 

சித்தர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஜீவசமாதி  அடைந்துள்ளார்கள். அந்த வகையில் இவர் ஜீவசமாதி  அடைந்த இடங்களின் எண்ணிக்கை மூன்று ஆகும். அவை விருத்தாச்சலம், சங்கரன் கோவில், மற்றும்  திருக்கடவூர் மயானம்.

திருக்கடவூர் மயானத்தில் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின்  தெற்கு மதில் சுவருக்கு வெளிப்புறம் தற்போது பாம்பாட்டி  சித்தர் பீடம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு மாதாமாதம்  பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

80 வயதை கடந்த கோவிந்தராஜன் அவர்களும் அவரது  மகன் மாலவன் அவர்களும்  இந்த சித்தர் பீடத்தின் பணிகளை பார்த்து  வருகிறார்கள். கோவிந்தராஜன் அவர்கள் இந்த  வயதிலும் பூஜை நேரத்தில் சிவபுராண பாடல்கள்  வள்ளலார் பாடல்களைப் பாடி அதற்கான விளக்கத்தையும்  தருகிறார். பூஜைக்கு பிறகு பக்தர்களின் பிரச்சனைகளுக்கு  தீர்வு சொல்கிறார். அதை சித்தர் வாக்கு என்றும் சொல்லலாம்.

அமாவாசை பூஜை, வியாழக்கிழமை பூஜைகளும் நடந்து  கொண்டு இருக்கிறது. இப்போது கீற்று கொட்டகையிலே தான்  சித்தர் பீடம் இருக்கிறது. அதை கட்டிடமாக மாற்ற  முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். தங்கள்  கோரிக்கையை  நிறைவேற்றியதற்காக முஸ்லீம் தம்பதி. ஒருவர் இங்கு தியானம் செய்ய ஷெட் ஒன்றை கட்டித் தந்துள்ளார்கள். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அவர்கள் இங்கு வருகிறார்கள்.

சித்தர்கள் இறைவனுக்கு நேர்முக உதவியாளர் போன்றவர்கள். அவர்கள் மூலம் நமது கோரிக்கைகள் நேரடியாக இறைவனை  சென்று சேரும். அவர்களின் பாடல்கள் உபதேசங்கள் நம்  வாழ்க்கையை செம்மைப் படுத்தும்.  அன்னை அபிராமியை  தரிசிக்க திருக்கடையூர் வரும் போது அங்கிருந்து சுமார்  2 கி.மீ. தொலைவில் இருக்கும் பாம்பாட்டி சித்தரையும்  நேரில் சென்று வழிபட்டு நாம் நலமாக வாழலாம். ஒரு  பௌர்ணமி பூஜையில் கலந்து கொண்டு நமது சக்தி  ஓட்டத்தை  மேலும் மேலும் உயர்த்திக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com