தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை ‘குறள் இனிது’ என்கிற திருக்குறள் நாட்டிய நாடகம் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை தெரிவித்ததாவது;
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை ’தீராக் காதல் திருக்குறள்’ என்ற திட்டத்தை அறிவித்து, தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் செயல்படுத்தி வருகிறது. இதில் திருக்குறளின் சிறப்பை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் விதமாகப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே குறளோவியப் போட்டி நடத்தப்பட்டு, அவற்றுள் சிறந்த ஓவியங்கள் தினசரி நாட்காட்டியாக அச்சிடப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் அடுத்த நிகழ்வாகத் திருக்குறளில் கூறப்பட்டுள்ள வாழ்வியல் நெறிகளைத் திருவள்ளுவரே நேரில் தோன்றி மாணவனுக்கு கூறும் வகையில் திருக்குறள் நாட்டிய நாடகம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
அந்த வகையில் சுதா சுவர்ணலட்சுமி குழுவினரின் ‘குறள் இனிது’ என்ற திருக்குறள் நாட்டிய நாடகம், நாளை மாலை 6 மணிக்கு சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு நுழைவு கட்டணம் ஏதும் கிடையாது.
-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.