

2026 சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த பின்னர் , விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. ஆரம்பத்தில் அதிமுகவுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தினாலும் , திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் விஜய் ஆட்சியமைக்க ஆதரவளிக்க முன் வந்தது. முதலில் காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு விலகி தவெகவிற்கு ஆதரவு அளித்தது.
அதன் பின்னர் பெரும்பான்மைக்கு மேலும் கூடுதல் ஆதரவு தேவைப்பட்டதால் கம்யூனிஸ்ட் கட்சிகள் , விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து கொண்டே , விஜய் ஆட்சியமைப்பதற்கு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். தமிழக சட்டமன்றத்தில் விஜய் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை கைப்பற்றினார். தவெக சார்பில் பலரும் அமைச்சர் பதவியை ஏற்ற பின்னர் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் ,விசிக, ஐயூஎம்எல் , கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கூட்டணி அமைச்சரவையில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பினை ஏற்று கூட்டணி கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னியரசு சமூக நலத்துறை அமைச்சர் ஆனார். ஐயூஎம்எல் சார்பில் ஷாஜகான் சிறுபான்மை துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
தவெக அமைச்சரவையில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் இணைந்ததும் , திமுக பொறுப்பாளர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட, முன்னாள் கூட்டணி கட்சியினரை மிகக் கடுமையான முறையில் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றது ஏன்? என்று விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் " விடுதலை சிறுத்தைகள் கட்சியும் திமுகவும் கொள்கைப் புரிதலோடு இணைந்து களமாடியதை நாடறியும். நாங்கள் எடுத்த முடிவிற்கு சுயநலம் அல்லது பதவி ஆசை காரணமல்ல, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தான் காரணம், இதை ஸ்டாலின் நன்கு அறிவார்.
நாங்கள் மனம் திறந்து வெளிப்படையாக எங்களுடைய முடிவை குறித்து ஸ்டாலினிடம் பேசியிருக்கிறோம். கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுக்கும் முடிவை தான் நாங்களும் எடுக்க முடிவு செய்திருந்தோம். இதை தனிமையில் ஸ்டாலினை நேரில் சந்தித்த போதும் விளக்கி இருக்கிறேன். எங்கள் முடிவை கூறிய பொழுது ஸ்டாலினும் உதயநிதியும் அதற்கு எதிராக இருக்கவில்லை.
சூழலுக்கு ஏற்ப முடிவை எடுத்துக் கொள்ளுங்கள் என்றுதான் அவர்கள் கூறினார்கள். அதன் பின்னர் இயக்கத் தோழர்களிடம் கலந்து பேசியதில் அமைச்சரைவில் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தோம்.அதிலும் குறிப்பாக நான் அமைச்சராக வேண்டும் என்ற கருத்து மேலோங்கியது. ஆனாலும் நான் இணங்கவில்லை. கட்சி அமைச்சரவையில் இடம்பெற முடிவு செய்த போது , கட்சியில் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசை அமைச்சராக்க முடிவு செய்தேன்.விசிக எடுத்த முடிவுக்கு பதவி ஆசை இல்லை.
தேர்தலுக்கு முன் , என்னை துருப்பு சீட்டாக்கி திமுக கூட்டணியை உடைக்க பல வழிகளில் முயற்சி செய்தனர். ஆனால் , நான் திமுக கூட்டணியை பலவீனப் படுத்தவிடமாட்டேன் என்று உறுதியாக இருந்தேன். தேர்தல் முடிவுக்கு பின்னர் இந்தக் கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை. காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுக்க முடிவை நிறுத்த எனக்கு வலிமை இல்லை. ஐயூஎம்எல் நிலைப்பாட்டில் நான் தலையிட முடியாது.
இப்படி இருக்கையில், சமூக வலைதளங்களில் என்னை மட்டும் குறிவைத்து அவதூறு பரப்புகிறார்கள். எங்கள் கட்சியின் வரைமுறைப்படி இடதுசாரிகள் எடுத்த முடிவை முன்வைத்து, எங்கள் கூட்டணி முடிவை ஸ்டாலினிடம் விளக்கி சொல்லிவிட்டு தான் முடிவினை அறிவித்தேன். அப்படி இருந்தும் எங்களுக்கு எதிராக பல அவதூறுகளை பரப்புகிறார்கள். எங்கள் நேர்மையையோ, எங்கள் அரசியல் தூய்மையையோ கலங்கப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. என்று திருமாவளவன் கூறியுள்ளார்.