மகளிர் உரிமைத்தொகைக்கான கட்டுப்பாடுகளை குறைக்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை

திருமாவளவன்
திருமாவளவன்
Published on

மாதந்தோறும் குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்பட இருக்கும் உரிமைத்தொகை பெறுவதற்கான கட்டுப்பாடுகள் அதிகமாக இருப்பதால் நிறைய பெண்களுக்கு கிடைக்காமல் போய்விடும் வாய்ப்பிருப்பதால், உரிமைத்தொகை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியிருக்கிறார்

தமிழ்நாடு அரசு சார்பில் வருகிற செப்டம்பர் மாதம் 15-தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.  அரசின் வழிகாட்டுதலின் படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்குவதற்கு தமிழகமெங்கும் வழங்குவதற்காக வரும் 20-ந் தேதி சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 4-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்திற்கான மனுக்கள் ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கே வந்து சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மனு பெறுதல், விண்ணப்பித்தல், பதிவேற்றம், தகுதி மற்றும் தகுதியின்மை குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவ்வபோது தீர்த்து வைக்கும் பொருட்டு கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட உள்ளன. ஆனாலும், மகளிர் உரிமைத்தொகை குறித்து பல்வேறு விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன.

அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் தனது தந்தையின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  மகளிர் உரிமைத்தொகை குறித்து தன்னுடைய கருத்துகளை தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் பயன்பெறுபவதற்காகவே மகளிர் உரிமை தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உரிமைத்தொகையை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான பெண்களுக்கு  உரிமை தொகையை பெறுவதற்கு வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் கூறி வருகிறார்கள்.

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான கட்டுப்பாடுகளில் சில மாற்றங்களையும், திருத்தங்களையும் கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் அவர்கள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.  தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் மகளிர் உரிமைத்தொகை குறித்து கேள்வி எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com