மதுரையில் அம்பேத்கர் சிலையிடம் மனு அளிக்கும் போராட்டத்தை நேற்று பாஜகவினர் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக பட்டியலின மக்களின் நலனுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் 10,446 கோடி ரூபாயை செலவு செய்யாமல் தமிழக அரசு திருப்பி அனுப்பி உள்ளது. ‘சமூக நீதி காக்கும் பாதுகாவலர்கள்’ எனத் தங்களைக் கூறிக்கொண்டு பட்டியலின மக்களுக்கு அவர்கள் துரோகம் செய்துள்ளனர். இதை அம்பேத்கர்தான் தட்டிக்கேட்ட வேண்டும் எனும் நோக்கில் அவரது சிலையிடம் மனு அளித்தோம். பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்னும் ஏன் அங்கம் வகிக்கிறார்? அங்கிருந்து வெளியேறி விடலாமே?
உண்மையிலேயே பட்டியலின மக்கள் மீது அவருக்கு அக்கறை இருந்தால் வேங்கைவயல் சம்பவத்துக்காக ஏன் அவர் போராடவில்லை? திருமாவளவனுக்கு பட்டியலின மக்களின் மீது அக்கறை இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளது. முரசொலி கட்டடம் உட்பட, தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்கள் அனைத்தையும் மீட்க பாஜக அறைகூவல் விடுக்கிறது. இதை திருமாவளவன் ஆதரிக்கிறாரா?
இந்தப் பஞ்சமி நில மீட்புக்காக பாஜக நடத்தவிருக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருமாவளவனை நேரடியாக அழைக்கிறோம். கலந்து கொள்வாரா திருமாவளவன்? இதுகுறித்து, திமுகவின் ஆர்.எஸ்.பாரதி பேசாமல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் பேசாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம்” என்று அவர் கூறி உள்ளார்.