தமிழக அரசுக்கு செக் வைக்கும் உயர் நீதிமன்றம்! திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் அரசு நிலைப்பாடு என்ன?

Madurai high court asking questions
Thiruparankunram Temple and High court branchkanthakottam
Updated on

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருநாளில் தீபம் ஏற்றலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால், அப்போது கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை சார்பில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதை தடை செய்ய கோரி மனு செய்து இருந்தது.

மதுரை மாவட்டம் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் , திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு, உரிய அனுமதி வழங்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வாழ்க்கை விசாரித்த நீதிபதி , திருப்பரங்குன்றம் மலையின் மீது இருப்பது தொன்மையான தீபத் தூண் என்பதை உறுதி செய்தார்.

அதனால், கோயிலின் பழமையான மரபுகளின் படி கார்த்திகை திருநாள் அன்று அங்கு தீபம் ஏற்றுவதற்கு எந்தவித தடையும் இல்லை. கோயில் நிர்வாகம் அன்று தீபம் ஏற்றுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் , அரசு அதிகாரிகளும் இதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்,என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட போதிலும் , அறநிலைத்துறை சார்பில் , அரசு அதிகாரிகள் சார்பிலும் இந்த உத்தரவு நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதனால் மனுதாரர் , மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர் காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தொடுத்தார்.

பின்னர் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவர் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு மற்றும் அரசு அதிகாரிகள் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசு சார்பில் அளிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கு இன்று , சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்விற்கு விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள் "மக்களின் ஆன்மீக உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டியதும் கட்டாயமாகும்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு, பொது மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு தனி நீதிபதியின் உத்தரவை ஏன் நடைமுறைப்படுத்தக் கூடாது? இதை நடைமுறைப்படுத்த அரசுக்கு என்ன மாதிரியான சிக்கல்கள் உள்ளன?" என்று கேள்விகள் எழுப்பினர்.

​இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் " இந்த விவகாரம் உணர்வுபூர்வமானது அதனால் விரிவான ஆலோசனை நடத்த வேண்டி உள்ளது" என்று தெரிவித்தார். அதேநேரம் மலையில் உள்ள தர்கா நிர்வாகிகள் சார்பில் தங்களது கருத்துக்களையும் இந்த வழக்கில் கேட்க வேண்டும் என்று மனு செய்து இருந்தனர்.

நீதிபதிகள் அமர்வு இறுதியாக "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது பற்றிய தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com